குரங்கணியைத் தொடர்ந்து தேனி ஆயில் மில்லில் தீ விபத்து.. 10 மணி நேரம்.. பதறவைத்த நொடிகள்!

முகப்பு > செய்திகள் > Tamil Nadu news
By |

தேனி குரங்கணி தீவிபத்தை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டையே உலுக்கிய அந்த தீவிபத்தின் போது மடிந்த உயிர்களும், அப்போது வெளியான புகைப்படங்களும், வீடியோக்களும் நம் உதிரத்தை உறைய வைத்தன.

அதே தேனியில்தான் தற்போது மீண்டும் தனியார் ஆயில் மில் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து 46 ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டு வருகின்றனர்.

எப்போதும் அதிக கொதிநிலையில் இருக்கும் இந்த ஆயில் மில்லின் கொதிகலனில் ஏற்பட்ட தீப்பொறியினால், உண்டான தீ சில நொடிகளிலேயே மில் முழுவதும் பரவியதில் பலருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்த இந்த தீவிபத்துக்கு பின் தீயை அணைக்க 50க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு தீயணைப்பு வீரர்கள் எல்லாம் சேர்ந்து போராடியுள்ளனர். அப்பகுதியைச் சுற்றி 3 கி.மீ பரப்பளவுக்கு புகை மண்டலமாக காட்சியளிக்கும் இந்த இடத்துக்கு தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் வருகை தந்து விபத்துக்கான காரணத்தை கேட்டறிந்தார்.

இதுகுறித்து அல்லிநகரம் காவல் துறையினர் விசாரித்து வருவதோடு, விபத்துக்கு ஆட்பட்ட ஆலை அருகே உயர் மின்னழுத்தக் கம்பிகள்  இருப்பதால் அன்னஞ்சி, ரத்தினம்நகர், வடபுதுப்பட்டி ஆகிய சுற்றுப்பகுதிகளில் நேற்றிரவு பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்