'மச்சான்' ஒரு தடவ கோவா'க்கு போணும் டா'...அவர் 'ஸ்கூட்டர்ல போறத'பாக்க முடியாதா?...மீளா துயரத்தில் கோவா!

முகப்பு > செய்திகள் > தமிழ் news
By |

'மச்சான் ஒரு தடவையாது கோவாக்கு போணும் டா'... இன்றைய இளைஞர்களிடம் இருந்து அதிகமாக வரும் வார்த்தைகள் தான் இவை.இளைஞர்களின் கனவு தேசமான கோவா இப்போது மகிழ்ச்சியாக இல்லை.அது தனது மகிழ்ச்சியை தொலைத்து விட்டு நிற்கிறது.காரணம் கோவாவின் நாயகன் அந்த மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டான்.அவர் தான் மனோகர் பாரிக்கர்.

கோவாவை பூர்விகமாக கொண்ட பாரிக்கர்,1955-ம் ஆண்டு மபுஸா எனும் மாவட்டத்தில் பிறந்தார்.பள்ளி பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ்.சிந்தனைகளுடன் வளர்ந்த போதும் ஐஐடியில் சேர்ந்து உயர்கல்வி கற்கவேண்டும் என்பது அவரது கனவாகவே இருந்தது.இப்போது இருப்பதை போன்று அந்த காலத்தில் நிறைய ஐஐடிகள் கிடையாது.அதேபோன்று ஐஐடியில் இடம் கிடைப்பதும் அவ்வளவு எளிது அல்ல.ஆனால் தனது விடா முயற்சியால் மும்பை ஐஐடியில் சேர்ந்து உலோகவியல் துறையில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றார்.

அரசியலில் ஈடுபட மிகுந்த ஆர்வமாக இருந்தாலும் பாரிக்கர் குடும்பத்தினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.இருப்பினும் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து ராமஜென்ம பூமி இயக்கத்துக்குள் தன்னை இணைத்து மிகுந்த துடிப்புடன் செயல்பட ஆரம்பித்தார்.ஒரு பக்கம் அரசியல் மறு பக்கம் பிஸ்னஸ் என இரண்டிலும் வேகத்தோடு செயல்பட்டு வந்தார்.கடந்த 1994-ம் ஆண்டு பாஜக முதல்முறையாக கோவாவில் களம் கண்டது.அப்போது பாஜக வேட்பாளராக நின்று வெற்றியும் பெற்றார்.எம்.எல்.ஏ.வாக தனது இன்னிங்ஸை தொடங்கிய பாரிக்கர்.எதிர்க்கட்சி தலைவர் என்ற உயரத்தை எட்டினார்.அதோடு கட்சிக்குள்ளும் அசைக்கமுடியாத சக்தியாக மாறினார்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது மோடி தான் அடுத்த பிரதமர் என கட்சிக்குள் மோடியை கைகாட்டியவர் பாரிக்கர்.அப்போது மோடிக்கும் பாரிக்கருக்கும் ஆரம்பித்த உறவு,பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு பாரிக்கரை பாதுகாப்புத்துறை அமைச்சராக அமரவைத்து அழகு பார்த்தார்.தீவிர மதவாதம்,மாட்டிறைச்சி பிரச்சனை என எதிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாத பாரிக்கர்,மாநில அரசியல் மீது தான் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இவர் நிகழ்த்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ அவருக்கு மிகப்பெரிய மரியாதையை பெற்று தந்தது.

2000-ம் ஆண்டு முதல் 4 முறை கோவா மாநில முதல்வராக இருந்த பாரிக்கர் மக்கள் சார்ந்தே அதிகமாக சிந்தித்தார்.அவருடைய சிந்தனைகளும் அதுபோன்றே இருந்தன.மாட்டிறைச்சி பிரச்னை எழுந்த போது பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களும்,அதனை வைத்திருந்தவர்களும் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம்.ஆனால் கோவா மக்களுக்குப் பிடித்த மாட்டிறைச்சியை தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

இருப்பினும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் மாட்டிறைச்சி விற்பனைக்குச் சிலர் தொல்லை கொடுக்கவே செய்தனர்.  கர்நாடகத்தின் பெல்காமில் இருந்துதான் கோவா மாநிலத்துக்கு மாட்டிறைச்சி கொண்டு செல்லப்படுவது வழக்கம். மாட்டிறைச்சி கொண்டு செல்லப்படும் வாகனங்களின் ஓட்டுநர்கள் தாக்கப்பட்டனர். அப்போது, மனோகர் பாரிக்கர் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அதனை தடுத்து,பாரதிய ஜனதா கட்சியிலிருந்து கொண்டே `மாட்டிறைச்சி தங்கு தடையில்லாமல் கிடைக்கும்,எனவே மக்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என தைரியமாக பேசினார்.

'இல்லத்தரசிகளுக்கான மாத வருமானத் திட்டம்,பெண் குழந்தைகளுக்கு திருமணப் பொருளாதார உதவி திட்டம் என மக்களின் எண்ணம் அறிந்து பாரிக்கர் செயல்பட்டார்.ஆனால் திடீரென வந்த கணையப் புற்றுநோய் அவரது வாழ்க்கையையே புரட்டி போட்டது.கோவா, மும்பை, எய்ம்ஸ், அமெரிக்கா என பல சிகிச்சைகள் நடந்த போதும்,கொஞ்சம் கொஞ்சமாக இளைக்கத் தொடங்கினார்.

எந்நேரமும் டியூப் பொருத்தப்பட்ட நிலையில் தனது பணிகளை கவனித்து வந்தார்.எதிர்க்கட்சியினர் கூட இவருக்கா இப்படி ஒரு வியாதி என வருத்தப்படும் அளவிற்கு தனது பணிகள் மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார்.அத்தனை சிகிச்சைகளும் பலனில்லாமல், நேற்று 17.3.19-ம் தேதி இரவு, கோவா மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டார் மனோகர் பாரிக்கர்.கேளிக்கை நகரமான கோவா தற்போது சோகத்தில் மூழ்கி கிடக்கிறது.

ஒருமுறை வேகமாக காரை ஓட்டி வந்த காவல்துறை ஆணையரின் மகன் முன்னால் சென்ற டூவீலர் மீது தவறுதலாக மோதிவிட்டான்.அப்போது ஆத்திரத்தில் கீழே இறங்கிய அவன் 'டூவீலரில் வந்தவரிடம் சென்று என்னய்யா பாத்து வரத்தெரியதா? நான் 'போலீஸ் கமிஷனரோட பையன்' என்று ஸ்டைலாகவும் கோபமாகவும் கூறினான்.

அதற்கு அவரோ 'அப்படியா தம்பி. நீங்க போலீஸ் கமிஷனரோட பையனா இருக்கலாம் ஆனா நான் சாதாரண சி.எம்.தாம்பா,என்னோட பேரு மனோகர் பாரிக்கர் என்றார் அவர்.அந்த மண்ணின் மைந்தனை இழந்து தவிக்கிறது இளைஞர்களின் கனவு தேசம்.

BJP, MANOHAR PARRIKAR, GOA CHIEF MINISTER, SCOOTER

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்