'ரூ 35க்கு கொரோனா சிகிச்சைக்கான மாத்திரை'... 'இந்தியாவில் மலிவு விலையில் அறிமுகம்!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா சிகிச்சைக்கான மாத்திரையை ரூ 35 விலையில் சன் பார்மா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை முற்றிலுமாக குணப்படுத்தும் மருந்து எப்போது வெளியாகும் என மக்கள் அனைவரும் காத்துக்கொண்டுள்ளனர். ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறினாலும் இன்னும் அவை பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் 3 நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கான மருந்தை மலிவு விலையில் சன் பார்மா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சன் பார்மா (Sun Pharmaceutical Industries Ltd) இந்த மருந்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. Favipiravir என்ற பெயரில் 200 மில்லி கிராம் எடையில் மாத்திரை ஒன்று ரூ 35 விலையில் சந்தைக்கு வந்துள்ளது. லேசான மற்றும் மிதமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே வாய்வழி மருந்து இதுதான் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள சன் பார்மா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கீர்த்தி கணோர்கர், "இந்தியாவில் தினமும் 50,000க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், சுகாதாரப் பணியாளர்களுக்கு கூடுதல் சிகிச்சை அம்சங்களை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் நோயாளிகள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில், ஃப்ளூகார்ட் பிராண்டின் கீழ் மலிவு விலையில் இந்த மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் அவர்களின் நிதிச்சுமை குறையும். தொற்று நோய்களுக்கு எதிரான சிகிச்சைகளில் எங்களுடைய பணி தொடரும்" எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்