'கொரோனா நோயை விட அதிகமா'... 'இந்தியர்கள் பயந்தது இதுக்கு தானாம்'... 'வெளியாகியுள்ள ஷாக் தரும் சர்வே முடிவு!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியர்கள் கொரோனா நெருக்கடி காலத்தில் எதை நினைத்து அதிகமாக பயந்துள்ளார்கள் என்பது குறித்த சர்வே முடிவு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இந்தியர்கள் கொரோனா நெருக்கடி காலத்தில் எதை நினைத்து அதிகமாக பயந்துள்ளார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட சர்வே ஒன்றின் முடிவு வெளியாகியுள்ளது. அந்த சர்வேயில் முதல் கேள்வியாக இந்த கொரோனா நெருக்கடியில் நீங்கள் அதிகம் எதை நினைத்து பயப்படுகிறீர்கள் எனக் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்தவர்களில் அதிகபட்சமாக 29% பேர் குடும்பத்தினருக்கு அல்லது உடன் பணியாற்றுவோருக்கு கொரோனாவை பரப்பிவிடுவோமோ என பயப்படுவதாக கூறியுள்ளனர்.

அதையடுத்து 22% பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதை நினைத்தால் பயமாக இருப்பதாகவும், 8% பேர் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதை நினைத்தும், 6% பேர் லோக்கல் அதிகாரிகளை சமாளிப்பதை நினைத்தும், 5% பேர் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் நிலையை நினைத்தும் கவலைப்படுவதாக கூறியுள்ளனர். மேலும் அந்த சர்வேயில் 17% பேர் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வருமானம் குறைந்துள்ளதை நினைத்து பயப்படுவதாகவும், 13% பேர் எதை நினைத்தும் பயமில்லை எனவும் கூறியுள்ளனர்.

இரண்டாவது கேள்வியாக உறவுகள், நண்பர்கள், உடன் பணியாற்றுவோர், பக்கத்து வீட்டார், வியாபார நண்பர்கள் என உங்களை சுற்றி கொரோனாவின் தாக்கம் எப்படி உள்ளது எனக் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்தவர்களில், 31% பேர் 6 அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா பாதித்தவர்களை தெரியுமெனவும், 34% பேர் 2-5 பாதிக்கப்பட்டவர்களையாவது சந்திப்பதாகவும், 12% பேர் ஒருவராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என தெரிந்தும் பேசுவதாகவும் கூறியுள்ளனர். 20 சதவீதம் பேர் பழகுவோர் யாரிடமும் கொரோனா இல்லை என நம்புவதாகவும் கூறியுள்ளனர்.

இதிலிருந்து 77% இந்தியர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா பாதிப்பாளர்களை சந்தித்துக்கொண்டு தான் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல உங்களை சுற்றி யாராவது அறிகுறிகள் இருந்தும் பரிசோதனை செய்துகொள்ளாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுள்ளார்களா எனக் கேட்கப்பட்டதற்கு 14% பேர் 10க்கும் மேற்பட்டவர்கள் அப்படி இருக்கிறார்கள் எனவும், 10% பேர் 6-10 பேர் அதுபோல இருக்கிறார்கள் எனவும், 14% பேர் 2-5 பேர் அப்படி இருக்கிறார்கள் எனவும், 10% பேர் ஒருவர் எனவும், 52% பேர் சரியாகத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்