ஃபோனில் நடந்த ‘டீலிங்?’... ஒப்பந்தம் போட்ட ‘சீன அதிபர்’... பதறவைத்த 'ஜெர்மன்' பத்திரிகை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீன அதிபர் உடன் உலக சுகாதார மையம் ஒப்பந்தம் எதையும் செய்யவில்லை, கொரோனா விவகாரத்தில் மக்களிடம் இருந்து எந்த விதமான விஷயங்களையும் இதுவரை மறைத்தது கிடையாது என்பதை மக்கள் நம்ப வேண்டும் என்று, உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த டெர் ஸ்பீகல் (Der Spiegel) என்ற ஊடகம், அந்நாட்டின் தேசியப் புலனாய்வு அமைப்பு கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில், “சீனாவில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட பிறகு, ஜனவரி 21-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸை போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, கொரோனா மனிதருக்கு மனிதர் பரவும் என்பதை தற்போதைக்கு வெளியில் சொல்ல வேண்டாம் என ஜின்பிங் கேட்டுக்கொண்டதாகவும், அதன்படி டெட்ராஸும் கொரோனாவைப் பற்றி முன்னரே எச்சரிக்கவில்லை’ என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை முற்றிலும் மறுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ளதாவது, “டெர் ஸ்பீகல் பத்திரிகை குறிப்பிட்டுள்ளதைப் போல ஜனவரி 21-ம் தேதி டெட்ராஸ் எந்த ஃபோனும் பேசவில்லை. அந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது. இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை. உலக சுகாதார மையம், சீனாவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை.

கொரோனா பரவலை முடிவுக்குக் கொண்டுவர உலக சுகாதார அமைப்பு செய்துவரும் முயற்சிகளைத் திசைதிருப்பவே இத்தகைய தவறான அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. மேலும், ஜனவரி 20-ம் தேதி கொரோனா மனிதருக்குப் பரவும் என்பதை சீனா உறுதிசெய்துவிட்டது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 22-ம் தேதி உலக சுகாதார அமைப்பு இந்தத் தகவலை உலக நாடுகளுக்கு அறிவித்துவிட்டது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா விவகாரத்தில் சீனாவையும் உலக சுகாதார அமைப்பையும் உலக நாடுகள் குற்றம் சுமத்திவரும் இந்த நேரத்தில், வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்