'சீனா இத மட்டும் பண்ணிருந்தா?...'இறால் விற்ற பெண்ணுக்கு வந்த சளி'...கொரோனாவின் முதல் டார்கெட்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் உள்ள மீன் சந்தையில் இறால் விற்ற பெண்ணிற்குத் தான் முதல் முதலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சீனா ஆரம்பத்திலேயே செய்யாமல் விட்ட சிறிய விஷயம் தான், தற்போது உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என அந்த பெண் வேதனையுடன் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கொரோனாவின் பாதிப்பு, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ளது. இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவில் முதன்முதலில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

பிரபல நாளிதழ்களான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தி பேப்பர், மிரர் யு.கே ஆகியவை வெளியிட்டுள்ள செய்தியில்,  வுஹானில் கடல் உணவு சந்தையில் இறால் விற்பனை செய்து வந்த வெய் கியுசியான் என்ற 57 வயதான பெண் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்துள்ளது. 57 வயதான வெய் கியுசியான் (Wei Guixian)  தனக்கு சளி தொந்தரவு ஏற்பட்டவுடன் அருகில் உள்ள சிறிய கிளினிக்கிற்கு சென்று ஊசி போட்டுள்ளார். ஆனால் அது சரியாகாத நிலையில்,  வுஹான் யூனியன் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

அப்போது அதே சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளோடு வுஹான் சந்தையிலிருந்து வந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனிடையே நிலைமை மோசமடைந்தததையடுத்து வெய் கியுசியான், தனிமைப்படுத்தப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற சிகிச்சையில் குணம் அடைந்த அவர் வீடு திரும்பியுள்ளார்.

இதற்கிடையே வுஹான் சந்தையில் இறைச்சி விற்பனை செய்பவர்கள் உபயோகிக்கும் கழிவறையை வெய் கியுசியான் உபயோகித்த போது அவருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து வுஹான் நகராட்சி சுகாதார ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், முதல்முதலாக கொரோனா பாதித்த 24 பேரில் வெய் கியுசியானும் ஒருவர் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இதுகுறித்து பேசிய வெய் கியுசியான், சீன அரசு ஆரம்பத்திலேயே இதன் தீவிரத்தை உணர்ந்து செயல்பட்டிருந்தால் பலி எண்ணிக்கை நிச்சயம் குறைந்திருக்கும் எனவும், பல நாடுகளுக்குப் பரவி இருக்காது எனவும் ஆவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

CORONA, CORONAVIRUS, COVID-19, WUHAN SHRIMP SELLER, WEI GUIXIAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்