‘கொரோனா மறைந்தாலும்’... ‘உலகம் எப்படி இருக்கும் தெரியுமா?’... 'நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர்’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா முடிந்த பிறகு உலகில் ஏற்படும் மாற்றத்துடன் நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்' என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் வரும் 19-ம் தேதி முதல் சில்லறைக் கடைகள், வாகன உற்பத்தி, கட்டுமானத் தளங்கள் ஆகியவை செயல்படலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில், ஊரடங்கால் சிரமம் அனுபவித்து வரும் தன் நாட்டு மக்களுக்குச் சில பொருளாதார அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‘கனடா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொற்று முற்றிலும் புவியிலிருந்து மறைந்த பிறகும் இதற்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் உலகில் பல விஷயங்கள் மாறும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கோவிட் -19 என்பது நம் சமூகத்தில் மாற்றங்களை உண்டாக்கும் விஷயமாக உள்ளது. இனி கனடியர்கள் அந்த மாற்றங்களை தங்கள் இயல்புகளாக எடுத்துக்கொண்டு அதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். கொரோனா பரவல் அல்லது அதனால் ஏற்படும் பாதிப்பு இன்னும் எதுவரை செல்லும் என்பதை நம்மால் கணிக்க முடியாது.

எனவே, நாம் அதை எதிர்த்துப் போராட எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தற்போது நம் நாட்டில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது, பலரை வேலைக்குச் செல்ல அனுமதிக்கும்போது வைரஸ் மேலும் விரிவடையும் அபாயம் உள்ளது. அதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

முதல்கட்டமாக கனடாவில் சிறிய அளவிலான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும்காலத்தில் வைரஸின் நிலையைப் பொறுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம்கட்ட தளர்வுகள் அறிவிக்கப்படும். அதேபோல் ஆகஸ்ட் மாத இறுதியில் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார். கனடாவில் தற்போதுவரை 73,401 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 5,472 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்