'இது ஒரு வாழ்க்கையான்னு Friends சிரிச்சாங்க'... 'இப்போ பேங்க்ல 10 கோடி இருக்கு'... '35 வயதில் வேலையை தூக்கி எறிந்த பெண்'... ரகசியம் என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

என்ன வாழ்க்கை முறையை நீங்கள் வாழ்கிறீர்கள் என நண்பர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளார்கள்.

35 வயதான கேட்டி இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், சிறு வயது முதலே ஆடைகளுக்காகச் செலவிடுவது, விடுமுறைகளை உல்லாசமாகக் கழிப்பது, ஓட்டல்களில் அடிக்கடி உணவு சாப்பிடச் செல்வது போன்ற பழக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. அவரின் பெற்றோர் கொடுத்த பாக்கெட் மணியைக் கூட பெரும்பாலும் செலவிடாமல் சேமித்து வந்துள்ளார்.

2008-ல் கல்லூரி படிப்பை முடித்த  கேட்டி வருடத்துக்கு 28,500 பவுண்டுகள் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். முன்னதாக ஆலன் என்ற நபருடன் காதல் வயப்பட்ட கேட்டி, அவருடைய குடும்பத்தினருடன் சேர்ந்தே வாழ்ந்து வந்துள்ளார். இதன் மூலம் தனியாக வீடு எடுத்து அதிகமான வாடகை கொடுப்பதைத் தவிர்த்து அந்த பணத்தையும் சேமித்துள்ளார்.

ஆலன் சுயதொழில் செய்து வந்த நிலையில், அவருடைய வருமானம் நிலையானது இல்லை என்பதால், ஒவ்வொரு செலவையும் பார்த்து கவனமாக இருவரும் செய்துள்ளார்கள். குறிப்பாக வேலை நிமித்தமாக வெளியில் செல்கிறார்கள் என்றால், உணவகத்தில் சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டு, அவர்களே உணவை வீட்டிலிருந்து கொண்டு சென்று சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

பயண தேவைக்காக புதிய கார் வாங்காமல், பழைய காரையே வாங்கி உபயோகித்து வந்துள்ளார்கள். வெளியில் பார்ட்டிக்கு நண்பர்கள் அழைத்தாலும், அவர்களோடு செல்லாமல் அந்த பணத்தையும் சேமித்து வந்துள்ளார்கள். இருப்பினும் நண்பர்களை அவ்வப்போது தங்களின் வீட்டிற்கு அழைத்து சிறிதாக விருந்து வைத்து அசத்துவதும் அவர்களின் வழக்கம்.

இவ்வாறு சிறுக சிறுக சேமித்த பணத்தில் கடந்த 2010ம் ஆண்டு 42,000 பவுண்டுகள் முதலீட்டில் பேசிங்ஸ்டோக் பகுதியில் இரண்டு படுக்கையறை கொண்ட பிளாட்டை வாங்கினார்கள். 2013ம் ஆண்டு ஆலனை முறைப்படி கேட்டி திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண செலவையும் முடிந்தவரைக் குறைத்துக் கொண்டார்கள்.

உள்ளூர் மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, அழைப்பிதழ்களை இ-மெயில் செய்து, திருமண மஹாலை நண்பர்களின் உதவியுடன் அலங்கரித்துக் கொண்டது எனப் பெரிய அளவில் பணத்தை மிச்சப்படுத்தினார்கள். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு கேட்டியின் சம்பளம் 58000 பவுண்டுகளாக அதிகரித்தது.

இருப்பினும் செலவைக் கட்டுக்குள் வைத்து மாதம் இருவரும் தலா 3000 பவுண்டுகளை சேமித்தார்கள். இன்னும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பதால் கேட்டி தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு காண்ட்ராக்டர் ஆக மாறினார். இதற்கிடையே பழைய கார், வீடு என சில நண்பர்கள் கேட்டியின் வாழ்க்கை முறையைக் கிண்டலடித்தனர். ஆனால் கேட்டியின் சிந்தனை முழுவதுமாக சேமிப்பை மட்டுமே சுற்றி வந்தது.

கடந்த 2018ம் ஆண்டு 8,98,000 பவுண்டுகள் கேட்டியின் சேமிப்பில் இருந்தது. ஆனால் 2019ம் ஆண்டு கேட்டி, ஆலனின் இலக்கான 1 மில்லியன் பவுடுகளை அடைந்த நிலையில், கேட்டி தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு ஓய்வு பெற முடிவு செய்தார். தற்போது அவர்களின் வங்கிக் கணக்கில் 10 கோடி ரூபாய் இருக்கும் நிலையில், நாடோடியாக உலகைச் சுற்றிப் பார்க்க இருவரும் முடிவு செய்துள்ளார்கள்.

அதோடு கேட்டி ரிபல் நிதிமேலான்மை பள்ளி என்ற பள்ளியை ஆரம்பித்துள்ள அவர், அதன் மூலம் 10 வார இலவச ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகிறார். இந்த இலவச வகுப்புகளில் அவர் தனது அனுபவத்தைப் பயன்படுத்திச் சேமிப்பு குறித்துக் கற்றுத்தருகிறார். இந்த வாழ்க்கை தங்களுக்கு நிறைவைத் தருவதாகக் கூறியுள்ள கேட்டி, கடன் இல்லாமல் இருந்தால் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என அடித்துக் கூறுகிறார் கேட்டி.

மற்ற செய்திகள்