அப்போ காமெடியன்.. இப்போ உக்ரைன் அதிபர்.. யார் இந்த ஜெலன்ஸ்கி? வியக்க வைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன்
உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா அதிபர் புதின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவத் தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதற்கு உக்ரைன் அரசு பதிலடி கொடுத்து வருகிறது.
அதிபர் ஜெலன்ஸ்கி
இந்த சூழலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமான தகவலை வெளியிட்டார். அதில், ‘ரஷ்யாவின் முதல் இலக்கு நான்தான். இரண்டாவது இலக்கு எனது குடும்பம். நான் இன்னும் தலைநகர் கீவில்தான் இருக்கிறேன். என் குடும்பம் இன்னும் உக்ரைனில்தான் உள்ளது. ரஷ்ய படைகளின் இலக்கு நாங்கள்தான் என்று தெரிந்தும் இங்கேயே தான் இருக்கிறோம். என்ன நடந்தாலும் என் நாட்டு மக்களை கைவிட மாட்டேன். இங்கேயே தான் இருப்பேன்’ எனக் கூறினார். மேலும் உக்ரைன் உதவியில்லாமல் தனித்துவிடப்பட்டுள்ளதாகவும் உருக்கமாக தெரிவித்தார்.
காமெடியன்
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் ஓர் அரசியல் தலைவர் உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி என கூறுகின்றனர். காமெடியான இருந்த ஒருவர் இப்போது உக்ரைன் அதிபராக உள்ளார் என்றால் நம்ப முடிகிறா? ஆனால் அதுதான் உண்மை.
குவார்டல் 95
கடந்த 1978-ல் சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த க்ரிவி ரிஹில், வொலாடிமிர் ஓலெக்ஸாண்ட்ரோவிச் ஜெலன்ஸ்கி பிறந்தார். ஜெலன்ஸ்கியின் பள்ளிப்படிப்பு முதல் ஆரம்ப வாழ்க்கை முழுவதும் ரஷ்ய மொழியியை சுற்றியே இருந்தது. பொருளாதாரம், சட்டம் என இரண்டு படிப்புகளை முடித்திருந்தாலும், ஜெலன்ஸ்கிக்கு கலைகளிலேயே அதிக ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் அவரை நகைச்சுவை நாடக குழுக்களில் சேர வழிவகுத்தது. கீவ் தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போதே நாடகங்களில் பங்கேற்கத் தொடங்கினார். ஜெலன்ஸ்கி மற்றும் மற்ற நடிகர்கள் ‘குவார்டல் 95’ என்ற குழுவை உருவாக்கி நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
அரசியல் நையாண்டி
மேடை நிகழ்ச்சிகளாகத் தொடங்கி 2003-ல் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி செய்யும் அளவுக்கு ‘குவார்டல் 95’ குழுவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், நாடகங்களில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் தற்கால அரசியல் சூழல்களை நையாண்டிகளாக்கி மக்களை சிரிக்க வைத்தனர். இந்த அரசியல் நையாண்டிக்கு மூளையாக செயல்பட்டவர் ஜெலன்ஸ்கியே. இதை அவரே முன்னின்று நடிக்கவும் செய்தார்.
மக்கள் சேவகன்
இந்த குழு 2015-ல் ‘மக்கள் சேவகன்’ (Servant of the People) என்ற நிகழ்ச்சியை தொகுத்தது. உக்ரைனின் 5-வது அதிபராக இருந்த பெட்ரோ பொரோஷென்கோவின் ஆட்சியின் ஊழல்கள் மற்றும் ரஷ்ய சார்பை இந்த நிகழ்ச்சி வழக்கமான அரசியல் நையாண்டியால் விமர்சனம் செய்தது. சோவியத்தில் இருந்த பிரிந்து தனி சுதந்திர நாடான பிறகு உக்ரைனின் ஆட்சியாளர்களால் செய்யப்பட்ட ஊழல் மற்றும் தவறுகளுக்கு எதிராக கொந்தளிப்பான மனநிலையில் இருந்த உக்ரேனிய மக்கள் மத்தியில் ‘மக்கள் சேவகன்’ நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது.
அதிபர் தேர்தல்
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு அரசியல் கற்பிக்கும் வரலாற்று ஆசிரியர் கதாபாத்திரத்தை ஜெலன்ஸ்கி ஏற்றிருந்தார். மாணவர்கள் பாடம் எடுப்பது போல் உக்ரைன் அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராக நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்திய செயல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எந்த அளவுக்கு என்றால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு ‘குவார்டல் 95’ குழு ‘மக்கள் சேவகன்’ என்ற பெயரில் கட்சியாக உருமாறும் அளவுக்கு அந்த நிகழ்ச்சியின் மூலமாக ஜெலன்ஸ்கி அபரிமிதமான புகழ் பெற்றார். இதனை அடுத்து அதிபர் வேட்பளராகவும் தேர்தல் அரசியலுக்குள் புகுந்தார்.
முக்கிய வாக்குறுதிகள்
பிரச்சாரங்களில் பெட்ரோ பொரோஷென்கோவின் ஆட்சியை தனது வழக்கமான அரசியல் நையாண்டி பாணியில் வறுத்தெடுத்தவர். யூடியூப் போன்ற சமூக ஊடங்கங்கள் வாயிலாக உக்ரேனிய இளைஞர்களையும் கவர்ந்தார். ரஷ்யா உடனான சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வருவதும், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளை சமாதானப்படுத்துவதும் உக்ரைனியர்களின் நீண்டகால கோரிக்கைகள். ஜெலன்ஸ்கி அதிபர் தேர்தலில் இதை முக்கிய வாக்குறுதியாக மாற்றினார்.
தேர்தலில் வெற்றி
இதன் விளைவு அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றார். 73 சதவீத வாக்குகளைப் பெற்று உக்ரைனின் 6=வது அதிபராக 2019-ல் பதவி ஏற்றார். எந்த வாக்குறுதியை சொல்லி ஆட்சிக்கு வந்தாரோ, அதற்கு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கையை தொடங்கினார். கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் மோதல் முற்றிய நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதனை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்தார்.
போர்
பேச்சுவார்த்தைகள், கைதிகள் பரிமாற்றங்கள் மற்றும் மின்ஸ்க் ஒப்பந்தங்கள் என சமாதான நடவடிக்கைளை அவர் தரப்பு தொடங்கினாலும் ரஷ்யாவின் ஒத்துழைப்புமின்மையால் அந்த நடவடிக்கைகள் எதுவுமே முழுமை அடையாமல் தோல்வியை சந்தித்தது. அதேநேரம், ரஷ்ய அதிபர் புதின் பிரிவினைவாத கட்டுப்பாட்டுப் பகுதியான கிழக்கு உக்ரைனில் வசித்த மக்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட் வழங்குவதாக அறிவித்தார். ஒருகட்டத்தில் ரஷ்யாவின் அழுத்தங்களை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ கூட்டணியில் உக்ரைனை இடம்பெறுவதற்கு முயற்சியை மேற்கொண்டார். இது ரஷ்யாவுக்கு கடுப்பை உண்டாக்கியது. இந்த முயற்சியே உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு வழி வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "போர்ல எங்களோட நிக்க யாருமே இல்ல.. தனியா நிக்குறோம்!".. உக்ரைன் அதிபரின் நெஞ்சை பிழியும் பேச்சு
- Russia-Ukraine Crisis: "அவங்களோட நம்பர்.1 டார்கெட் நான்தான்.. என்ன ஆனாலும் சரி".. அதிபரின் உருக்கமான வீடியோ..!
- யாருமே எங்களுக்கு உதவி பண்ணல.. முதல்ல சப்போர்ட் பண்ணினவங்களும் இப்போ ரஷ்யாவ கண்டு பயப்படுறாங்க.. உக்ரைன் அதிபர் உருக்கம்
- "ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடைய மாட்டோம்".. உக்ரைன் அதிபர் அதிரடி அறிவிப்பு..!