'காபூலில் சிக்கியவர்களிடம் இப்படி ஒரு வியாபாரமா'?... 'வெளிவந்த அமெரிக்க நிறுவனத்தின் கோர முகம்'... எங்களுக்கு திராணி இல்லடா, கதறும் மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சில சம்பவங்களைப் பார்க்கும் போது, நீங்கள் எல்லாம் மனிதர்களா எனக் கேட்கத் தோன்றும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது காபூலில் நடந்துள்ளது.

ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இனிமேல் அங்கு வாழ முடியாது எனப் பல லட்சக்கணக்கான மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி வருகிறார்கள். இதனால் அப்பாவி ஆப்கான் மக்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அனைவரும் அந்த நாட்டிலிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் திரண்டுள்ளனர்.

ஏதாவது ஒரு நாட்டில் அகதிகளாகச் சென்று கூட மீதி காலத்தை ஓட்டி விடலாம், உயிரோடாவது இருப்போமே என்ற எண்ணத்தில் பல மக்கள் அங்குத் திரண்டுள்ளார்கள். இதற்கிடையே தாலிபான்கள் விதித்துள்ள காலக்கெடு ஆகஸ்ட் 31ம் தேதியுடன்  முடிவடையவிருக்கும் நிலையில், கனடா, இங்கிலாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகள் மீட்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன.

இருப்பினும் கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் Blackwater என்ற நிறுவனம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறப் பயணிகள் ஒருவருக்கு தலா 6,500 டாலர் (இந்திய மதிப்பில் 4.5 லட்சத்திற்கும் மேல்) கட்டணம் விதித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு ஆப்கானிஸ்தானின் வேறு பகுதியிலிருந்து காபூல் விமான நிலையத்திற்குப் பத்திரமாக அழைத்துவர தனிக்கட்டணமும் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்காவுக்கு உதவிய அப்பாவி ஆப்கான் மக்கள், அமெரிக்காவால் தாங்களும் காப்பாற்றப்படுவோம் என நம்பி இருக்கிறார்கள்.

ஆனால் அமெரிக்க நிறுவனம் தற்போது வசூலிக்கும் கட்டணம் அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஏற்கனவே உடைமைகளை இழந்து, உயிர் பிழைத்தால் போதும் எனத் தவிக்கும் மக்களிடம் இதுபோன்று கட்டண கொள்ளையில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம் என ஆப்கான் மக்கள் குமுறி வருகிறார்கள்.

இதனிடையே பெரும்பாலான மீட்பு நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்குக் கொண்டுவரப்படும் எனவும், எஞ்சியுள்ள நாட்கள் அமெரிக்க ராணுவத்தின் தளவாடங்களை மீட்க நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்