ஜோ பைடன் மூதாதையர் ‘சென்னையில்’ வாழ்ந்து இருக்காங்களா..? வியப்பை ஏற்படுத்திய தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூதாதையர்கள் சென்னையில் வாழ்ந்துள்ளதாக ஆச்சரிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மன்னார்குடியை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்க முதல் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் தனது தாத்தா பி.வி.கோபாலனுடன் சென்னை கடற்கரையில் நடந்து சென்றதாக தெரிவித்திருந்தார். இப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூதாதையர்களும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் சென்னையில் வாழ்ந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோ பைடன் தனது இந்திய தொடர்பு பற்றிய செய்தியை முதல்முதலாக 2013ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பதிவு செய்தார். அதில் கிழக்கிந்திய கம்பெனியில் கேப்டனாக இருந்த அவரது ‘பெரிய, பெரிய, பெரிய, பெரிய, பெரிய தாத்தா’ ஜார்ஜ் பைடன் பற்றி தெரிவித்தார். ஓய்வுக்கு பிறகு ஜார்ஜ் பைடன் இந்தியாவில் குடியேற முடிவு எடுத்து ஒரு இந்தியப் பெண்ணை திருமணம் செய்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் இந்தியாவில் ஜார்ஜ் பைடன் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால் கிழக்கிந்திய கம்பெனியில் ஆயுத வணிகக் கப்பல்களின் கேப்டன்களாக இருந்த இரண்டு பைடன்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. சகோதரர்களான அவர்கள் கேப் ஆஃப் குட் ஹோப் வழியாக லண்டனுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கடினமான பாதையில் தங்களது பயணத்தை தொடங்கியுள்ளனர். பல கப்பல்களின் கேப்டனாக இருந்த இளைய சகோதாரர் வில்லியம் ஹென்றி பைடன் மார்ச் 25, 1843ம் ஆண்டு 51 வயதில் ரங்கூனில் பக்கவாதம் காரணமாக உயிரிழந்தார்.

மூத்த சகோதரரான கிறிஸ்டோபர் பைடன் பல கப்பல்களில் கேப்டனாக பணியாற்றி மெட்ராஸில் (சென்னை) நன்கு அறியப்பட்ட நபராக இருந்துள்ளார். இந்தியாவில் குடியேறிய அவர், 1821ம் ஆண்டு வேல்ஸ் இளவரசி சார்லோட்டின் கப்பலுக்கு கேப்டனாக பதவியேற்றுள்ளார். அப்போது இங்கிலாந்து மற்றும் கல்கத்தாவுக்கு இடையே நான்கு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

பைடன் தனது சொந்த ஊரான டெர்பிஷையரில் ஹாரியட் ஃப்ரீத் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருந்துள்ளனர். 41 வயதில் ஓய்வு பெற்ற பிறகு சிட்டகாங்கில் கட்டப்பட்ட தேக்கு கப்பல் விக்டரியை சொந்தமாக வாங்கி, 1832 மற்றும் 1834ம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் பம்பாய்க்கு இரண்டு முறை பயணம் செய்துள்ளார். 1839ம் ஆண்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ளார். மெட்ராஸில், மாஸ்டர் அட்டெண்டண்ட் மற்றும் ஸ்டோர் கீப்பராக இருந்துள்ளார்.

19 ஆண்டுகள் தனது கடின உழைப்பால் மெட்ராஸின் புகழ் பெற்ற நபராக மாறியுள்ளார். உதாரணமாக கடற்கரைகளில் விளக்கு அமைப்பது போன்ற கடல் பாதுகாப்பிற்கான மேம்பாடுகளை தொடர்ந்து செய்து வந்துள்ளார். மேலும் கடற்படையினரின் விதவைகள் மற்றும் அனாதைகளுக்கான தொண்டு நிறுவனங்கள் நடத்தியுள்ளார். அவரது மகன் ஹோராஷியோ 1846ல் மெட்ராஸ் பீரங்கியில் கர்னல் ஆகியுள்ளார்.

1858ம் ஆண்டு கிறிஸ்டோபர் பைடன் மெட்ராஸில் இறந்தார். அங்குள்ள கதீட்ரலில் ஒரு நினைவுத்தகடு உள்ளது. அதில் தனது நாய் ஹெக்டருடன் அமர்ந்திருக்கும் பைடனின் உருப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி ஹாரியட் 1880 வரை லண்டலின் வசித்து வந்தார். அவரது சில ஆவணங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் தனது இந்திய மனைவியை பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சொல்லும் மூதாதையர், கிறிஸ்டோபர் பைடனாக இருக்கவே பெரும்பாலும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

News Credits: Gateway House

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்