‘தப்பான திசையில போய்ட்டு இருக்கோம்’!.. இனி தடுப்பூசியே போட்டாலும் ‘இது’ கட்டாயம்தான்.. அமெரிக்க அரசு அதிரடி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதனால் அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. மேலும் வைரஸ் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 61 ஆயிரம் பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக புளோரிடா, கலிஃபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது. டெல்டா வகை வைரஸ் பரவல்தான், மீண்டும் தொற்று அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் அமெரிக்காவில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குனர் ரோசெல் வலென்ஸ்கி, ‘தடுப்பூசி செலுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வேளையில் டெல்டா வகை வைரஸால், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது புதிய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதனால் வைரஸ் பரவல் உள்ள பகுதிகளில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் உட்பட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்’ என அவர் கூறியுள்ளார்.

அதேபோல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபௌசி கூறுகையில், ‘நாடு தவறான திசையில் போய்க் கொண்டிருக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் பாதிப்பு நமக்குதான்’ என எச்சரிக்கை செய்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்