"ரயில் ஏற விட மாட்டேங்குறாங்க.. துப்பாக்கியை காட்டி மிரட்டுறாங்க".. உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள் கதறல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் உச்சம் அடைந்து வருகிறது. இந்நிலையில் அங்கு படித்துவரும் மாணவர்களின் நிலைமை குறித்து மக்களிடையே அச்சம் நிலவிவருகிறது. உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்க ஆப்பரேஷன் கங்கா என்னும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. உக்ரைனுக்கு அண்டை நாடுகளின் வழியாக மாணவர்களை மீட்க தேவையான முயற்சிகளை எடுத்துவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertising
>
Advertising

இந்நிலையில், உக்ரைன் ராணுவம் தங்களை ரயில்களில் எற அனுமதிப்பது இல்லை எனவும் துப்பாக்கியை கொண்டு மிரட்டுகிறார்கள் எனவும் அங்குள்ள தமிழக மாணவர்கள் தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உடனே வெளியேறுங்கள்

உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் உச்சத்தை அடைந்திருக்கும் வேளையில், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக எல்லை பகுதிகளுக்கு சென்று விடுமாறு உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் நேற்று அவசர அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. வாகனங்கள் கிடைக்கவில்லை என்றாலும் நடந்தாவது நகரங்களை விட்டு வெளியேறும்படி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது இந்திய தூதரகம்.

இதனை அடுத்து ரயில்கள் மூலமாக உக்ரைன் எல்லை பகுதிகளை அடைய மக்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். அப்போது, உக்ரைன் மக்கள் தங்களை ரயிலில் ஏறவிடாமல் பிடித்து கீழே தள்ளுவதாகவும் உக்ரைன் பாதுகாப்புப் படை  துப்பாக்கிகளை காட்டி மிரட்டுவதாகவும் தமிழக மாணவர்கள் சமூக வலைதலங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தமிழக மாணவர்கள்

இது குறித்துப் பேசிய தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர்,"உடனடியாக நகரத்தை விட்டு வெளியேறும்படி நேற்று இந்திய தூதரகம் தெரிவித்தது. இதனை அடுத்து, ரயில் மூலமாக எல்லைக்கு செல்ல முடிவெடுத்து ரயில் நிலையத்திற்கு வந்தோம். ஆனால், உக்ரைன் மக்கள் எங்களை ரயிலில் ஏறவிடவில்லை. காலையில் இருந்து நடந்துகொண்டே இருக்கிறோம். இப்பொது வேறு ரயில் நிலையத்திற்கு வந்திருக்கிறோம். இங்கே இருந்த சில இந்திய குடும்பங்கள் அவர்களிடம் இருந்த உணவுகளை கொடுத்தனர். காலையில் இருந்து இரண்டு பிஸ்கட்டுகளை மட்டுமே சாப்பிட்டிருக்கிறோம். தூதரகம் சார்பிலும் எந்த உதவிகளும் செய்யப்படவில்லை. எங்களுக்கு விரைவில் உதவி தேவை" என்றார்.

விமானங்கள் மூலமாக மாணவர்களை மீட்டுவரும் இந்திய அரசு இன்று மட்டும் 15 மீட்பு விமானங்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. போர் களத்தில் சிக்கியுள்ள மாணவர்களை விரைந்து இந்தியாவிற்கு அழைத்துவர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

UKRAINE, RUSSIA, STUDENTS, தமிழகமாணவர்கள், உக்ரைன், ரஷ்யா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்