'சார் நீங்க ஆன்லைன்ல தான் இருக்கீங்க'... 'ஜூம் இணைப்பை துண்டிக்க மறந்ததால் வந்த வினை'... தொக்காக மாட்டிய ஆசிரியரும், ஆசிரியையும்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜூம் இணைப்பைத் துண்டிக்க மறந்து ஆசிரியரும், ஆசிரியையும் பேசிய உரையாடல்கள் பதிவாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரும் ஆசிரியை ஒருவரும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகப் பாடம் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார்கள். வகுப்பு முடிந்ததும் ஜூம் இணைப்பைத் துண்டிக்க மறந்த இருவரும், தாங்கள் இருவரும் ஆன்லைனில் தான் இருக்கிறோம் என்பதை அறியாமல் மாணவர்களை மோசமாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

தொழில் நுட்பத்தைப் பொறுத்தவரை இந்த மாணவர்களுக்குச் சுத்தமாக அறிவே இல்லை என ஒரு ஆசிரியர் விமர்சிக்க, அடுத்த முனையிலிருந்த ஆசிரியை, மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி மாணவர்களைத் திட்டுகிறார். அதோடு சீனியர் ஆசிரியர்கள் இந்த மாணவர்களைத் தொழில் நுட்பத்தில் சிறந்தவர்கள் என எதை வைத்துக் கூறுகிறார்கள் எனக் கோபத்துடன் அந்த ஆசிரியரிடம் கேட்கிறார். அதோடு டிக்டாக் என்றால் எளிதாக ஒரு பட்டனைத் தட்டி அனைத்தையும் செய்து விடுகிறார்கள். ஆனால் எலக்ட்ரானிக் முறையில் வீட்டுப் பாடத்தை சமர்ப்பிக்கச் சொன்னால் மட்டும் இவர்களால் முடியாத என மீண்டும் மோசமாகப் பேசிக் கொள்கிறார்கள்.

பின்னர் இருவரும் தங்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பேசிக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அப்போது சில மாணவர்கள், சார் நீங்கள் இன்னும் ஆன்லைன்ல தான் இருக்கிறீர்கள் எனச் சொல்லியும், அதைக் கொஞ்சம் கூட கவனிக்காமல் அவர்கள் விருப்பத்துக்குப் பேசிக்கொண்டே செல்கிறார்கள். இதைக் கவனித்த மாணவர் ஒருவரின் தாய், இரு ஆசிரியர்களின் உரையாடலை ரெகார்ட் செய்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.

இரு ஆசிரியர்களின் உரையாடலைக் கேட்டு அதிர்ந்து போன பள்ளி நிர்வாகம் இருவரையும் உடனடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதோடு அவர்கள் மீது விசாரணை செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தொழில் நுட்பத்தைப் பொறுத்தவரை தனக்குத் தான் எல்லாம் தெரியும் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைத்து நடந்தால், இறுதியில் இதுபோன்று கூட நடக்கலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்