லைவ் ஒளிபரப்பை ‘பாதியிலேயே’ நிறுத்திய டிவி சேனல்கள்.. அப்டி டிரம்ப் என்ன பேசினார்?.. பரபரப்பில் அமெரிக்கா..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசிய லைவ் வீடியோவை டிவி சேனல்கள் பாதியிலேயே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. 120 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில், 66.9 சதவீத ஓட்டுகள் இந்த தேர்தலில் பதிவாகி சாதனை படைத்து உள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் கூறுகின்றன. தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 538 தொகுதிகளில் 270 தொகுதிகளை கைப்பற்றுபவரே அமெரிக்க அதிபராக பதவியில் அமர முடியும். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விட்டது. நேற்று முன்தினம் ஜோ பைடன் 238 தொகுதிகளும், டிரம்ப் 213 தொகுதிகளும் வென்றிருந்தனர். இதனை அடுத்து மிச்சிகன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களை ஜோ பைடன் கைப்பற்றியதைத் தொடர்ந்து அவரது நிலை மேலும் வலுப்பெற்றுள்ளது.

கடைசியாக கிடைத்த தகவல்கள்படி, ஜோ பைடன் அதிபர் பதவியை கைப்பற்றுவதற்கு 6 தொகுதிகள் மட்டுமே தேவை. அவர் இதுவரை 264 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார். ஆனால் டிரம்ப் 214 தொகுதிகளில் வெற்றி பெற்று பின்தங்கி இருக்கிறார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக டிரம்ப் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இதனை அனைத்து ஊடகங்களும் நேரலையாக ஒளிபரப்பு செய்தன. பேட்டியின்போது பேசிய டிரம்ப், ஜனநாயக கட்சியினர் (ஜோ பைடன்) சட்டவிரோத வாக்குகளை பயன்படுத்தி வெற்றியை எங்களிடம் இருந்து திருட முயற்சிக்கிறார்கள் என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திரும்பத் திரும்ப எதிர்க்கட்சி மீது டிரம்ப் குற்றச்சாட்டை அடுக்கிக்கொண்டே சென்றார்.

இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்காவின் பெரிய ஊடகங்களான ABC, CBS, NBC உள்ளிட்ட டிவி சேனல்கள் நேரலையை பாதியில் நிறுத்தி விட்டன. டிரம்ப் தவறான தகவல்களை பரப்புவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை ஜோ பைடன் மீது சுமத்துவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் டிரம்ப் பேட்டியின் நேரலையை ஊடகங்கள் பாதியிலேயே நிறுத்தியதால் அமெரிக்க மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்