'புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘எல்லையை மூடியதால் பல கிலோ மீட்டர்’... ‘காத்திருக்கும் வாகனங்கள்’... ‘அதிலும் நெகிழ வைத்த மனிதம்’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸ் எல்லையில் தடுத்துநிறுத்தப்பட்ட சரக்கு லாரிகள் அணிவகுத்து நிற்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்து புதியவகை கொரோனா வைரஸ்  பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ், பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன. குறிப்பாக பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்துடனான எல்லையை மூடியுள்ளது. இதனால், இங்கிலாந்துடனான சாலைப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தனது எல்லையை மூடியதால் இங்கிலாந்தில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் இருநாட்டு எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு லாரிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் இரு நாட்டு எல்லையிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்பின்னர் இருநாடுகளும் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, எல்லையில் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கே லாரி ஓட்டுநர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு அதில் நெகட்டிவ் என முடிவு வந்த நபர்கள் மட்டுமே பிரான்சுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறைக்கு பல மணி நேரங்கள் எடுத்துக்கொள்கிறது.

ஒருமணிநேரத்தில் அதிகபட்சமாக 200 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் எல்லையில் அணிவகுத்து உள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டிற்குச் செல்ல விரும்பிய லாரி ஓட்டுநர்கள் இந்தத் தடைகாரணமாக வீதிகளில் நிற்பதால் பெரும் விரக்திக்கு உள்ளாகியுள்ளார்கள். 

இதனால், உணவு, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் தவித்துவந்தனர். இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள் தங்கள் தொண்டு அமைப்புகள் மூலம் இருநாட்டு எல்லையில் சிக்கி பசியால் தவித்து வரும் லாரி  ஓட்டுநர்களுக்கு உணவு தயாரித்து இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்