என்ன அதுக்கு நியாபகம் இருக்குமா? 12 வருஷம் முன்னாடி கடைக்கு போயிருந்தப்போ, ஒருநாள்.. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய உரிமையாளர்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கலிஃபோர்னியா: அமெரிக்காவில் நாய் ஒன்று, 12 ஆண்டுகளுக்குப் பின், அதன் உரிமையாளருடன் இணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், லஃபேயட்டே நகரில் வசித்து வந்தவர் மிச்சல். கடந்த, 2009-ம் ஆண்டில், பிறந்து 6 மாதங்களே ஆன இரட்டை பெண் நாய்களை தத்தெடுத்து, இவர் தனது வீட்டில் வளர்த்து வந்தார். இந்த இரண்டு நாய்களும் 6 மாதங்களாக செல்லமாக வளர்ந்து வந்த நிலையில், மிச்சல் கடந்த 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு ஒன்றுக்கு சென்றுள்ளார்.

காணமல் போன நாய்:

அதன் பிறகு 20 நிமிடங்களில் திரும்பியபோது, வீட்டில் இருந்த இரண்டு பெண் நாய்களில் ஷோயி என்ற பெண் நாய் காணமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் மிச்சல். தான் ஆசையாக வளர்த்த நாயை காணாததால் பதற்றமடைந்து, தனது வீடு மற்றும் அக்கம்பக்கத்தில் மிச்சல் தேடியுள்ளார். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

'மைக்ரோ சிப்’ உதவியுடன் தேடும் பணி:

அதன் பிறகு இது குறித்து விலங்குகள் நல அலுவலகத்திலும் மிச்சல் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து காணாமல் போன ஷோயியின் கழுத்தில் பொறுத்தப்பட்டிருந்த, 'மைக்ரோ சிப்’ உதவியுடன் தேடும் பணிகளும் நடைபெற்றது. ஆனால், எங்கு தேடியும் ஷோயி கிடைக்கவில்லை. இதனால், அந்த ‘மைக்ரோப் சிப்’ பொறுத்தும் நிறுவனம், ஷோயி என்ற அந்த பெண் நாய் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதி தேடும் பணிகளை நிறுத்தியது.

மன உளைச்சல்:

ஷோயி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த, நாயின் உரிமையாளர் மிச்சல் வருத்தமடைந்தார். மேலும், கடந்த 2015-ம் ஆண்டு ஷோயி உயிரிழந்ததாக பட்டியலில் சேர்க்கப்பட்டது. தான் ஆசையாக வளர்த்த இரட்டை நாய்களில் ஷோயி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதால், மிச்சல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதன்பிறகு, மிச்சல் தனது குடும்பத்தினருடன், லஃபேயட்டே நகரில் இருந்து, பெனிசியா நகரத்திற்கு சென்று வாழ தொடங்கினார்.

ஷோயி உயிருடன் மீட்பு:

இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் வளர்த்த ஷோயி, தற்போது உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. காணாமல் போன லஃபேயட்டே நகரில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில், ஸ்டாக்டன் என்ற நகரில் மிச்சலின் செல்லப்பிராணி ஷோயி உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. ஸ்டாக்டன் நகரில் உள்ள ஒரு குப்பைத்தொட்டி அருகே, உடல்நிலை மிகவும் மோசமடைந்து நாய் ஒன்று கிடப்பதாக போலீசார், விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு நேற்று சிலர் தகவல் கொடுத்தனர்.

மொபைல் எண்:

தகவல் அறிந்த காவல் துறையினர், விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த நாயை மீட்டு, அதன் உடலில் கட்டியிருந்த மைக்ரோ சிப்பை ஆய்வு செய்தனர். அதில், ஒரு மொபைல் எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது, அது மிச்சல் உடைய மொபைல் எண் என்பதும், அந்த நாய் 2010-ஆம் ஆண்டு காணாமல்போன ஷோயி என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து, ஷோயி கண்டுபிடிக்கப்பட்டது குறித்து உரிமையாளர் மிச்சலிடம் அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.

அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை:

12 வருடங்களுக்கு முன் காணமல் போன தனது செல்லப்பிராணி ஷோயி கண்டுபிடிக்கப்பட்ட தகவல் கேட்டு, மிச்சல் மிகுந்த மன மகிழ்ச்சியடைந்தார். அதன்பின்னர் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, ஷோயி அதன் உரிமையாளரான மிச்சலிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மிச்செல் கூறுகையில், "நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இப்படி ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடக்கும் என்று நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.

ஆனால் ஷோயியை வீட்டிற்கு அழைத்து வந்ததில், நான் மகிழ்ச்சியடைகிறேன். ஷோயியுடன் தத்தெடுத்த மற்றொரு பெண் நாய் தற்போது இல்லை. எனினும், இப்போது இருக்கும் லேபராடர் மற்றும் ஷோயி நல்ல நண்பர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார். இதேபோல் அதிகாரிகள் கூறுகையில், ஒரே செல்ஃபோன் நம்பரை, ஒருவர் இத்தனை வருடங்கள் வைத்திருந்ததால், தொலைந்துபோன நாயை கண்டுப்பிடித்து கொடுக்க உதவி புரிந்தது என்று தெரிவித்துள்ளனர்.

DOG, 12 YEARS, US, அமெரிக்கா, நாய்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்