பச்சிளம் குழந்தைகளை வீட்டுக்கு எடுத்துச் செல்ல தயாரான தாய்மார்கள்!... கடைசி நிமிடத்தில் வந்த பரிசோதனை முடிவு!... நெஞ்சை உலுக்கும் துயரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐரோப்பிய நாடான ருமேனியாவில் பிறந்த குழந்தைகள் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ருமேனியாவின் மேற்கு பகுதியில் உள்ள திமிசோரா நகர அரசு ஆஸ்பத்திரி ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணிகள் 10 அழகான குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்கள் அனைவரும் குழந்தைகளுடன் ஆவலாக வீடு திரும்ப இருந்த நிலையில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த பச்சிளம் குழந்தைகள் 10 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் குழந்தைகளின் தாயார் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதுதான். இதுபற்றிய செய்தி ருமேனிய ஊடகங்களில் வேகமாக பரவியது.

இதைத்தொடர்ந்து அந்நாட்டின் சுகாதார மந்திரி நெலு டடாரு அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். திமிசோரா நகரின் பொது சுகாதாரத்துறை இயக்குனரை உடனடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

குழந்தைகளை தடுப்பூசி போடுவதற்கோ அல்லது குளிப்பாட்டுவதற்கோ எடுத்துச்சென்றபோது ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸ்பத்திரி ஊழியர்களால் குழந்தைகளுக்கும் அத்தொற்று பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் உள்ளதா? என்பதை கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டது. தற்போது இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.

இதேபோல், 10 பச்சிளம் குழந்தைகளும் தங்களது அன்னையர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதில், இன்னொரு கொடுமை என்னவென்றால் கடந்த மாதம் 31-ந்தேதி இதே ஆஸ்பத்திரியின் பிரசவ வார்டில்தான் மருத்துவ ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டு, அந்த வார்டை தற்காலிகமாக மூடியுள்ளனர்.

ஆனால் பின்னர் டாக்டர்களுக்கோ, இதர மருத்துவ ஊழியர்களுக்கோ கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறி மறுநாளே திமிசோரா நகர பொதுத்துறை இயக்குனர் பிரசவ வார்டை திறக்க உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

அதனால்தான் பணியில் மிகுந்த அலட்சியம் காட்டியதாக அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். தவறு செய்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்