‘3 வருசம் 3,800 கிமீ’.. கடலில் மிதந்து வந்த பாட்டில்.. உள்ளே இருந்த ஒரு துண்டுச்சீட்டு.. என்ன எழுதி இருந்தது..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடலில் 3 வருடங்களாக மிதந்து வந்த ப்ளாஸ்டிக் பாட்டிலுக்குள் ஒரு துண்டு சீட்டு இருந்ததை சிறுவன் ஒருவன் கண்டுபிடித்துள்ளான்.

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் சாண்டோஸ் என்ற 17 வயது சிறுவன், சில தினங்களுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளான். ஆழ்கடலில் மும்முறமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ப்ளாஸ்டிக் பாட்டில் ஒன்று கடலில் மிதந்து வந்துள்ளது.

உடனே அந்த பாட்டிலை எடுத்துப் பார்த்தபோது அதற்குள் ஒரு துண்டு சீட்டு இருந்துள்ளது. இதனை அடுத்து அதை எடுத்துப் படித்தபோது அந்த பாட்டிலை, கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவின் ரோட் தீவு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் கடலில் வீசியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த சீட்டில், ‘இதை நன்றியை வெளிப்படுத்தும் நோக்கில் எழுதியிருக்கிறேன், எனக்கு 13 வயது ஆகிறது. நான் வெர்மோன்ட் பகுதியை சேர்ந்தவன். ரோட் தீவில் உள்ள எனது குடும்பத்தை பார்க்க வந்துள்ளேன். இது யாருக்காவது கிடைத்தால் இந்த இமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்’ என குறிப்பிட்டு ஒரு இமெயில் முகவரியும் எழுதப்பட்டிருந்துள்ளது.

இதனை அடுத்து சிறுவன் கிறிஸ்டியன் சாண்டோஸின் தாய் மோலி சாண்டோஸ், இதுகுறித்து சம்மந்தப்பட்ட இமெயிலுக்கு தகவல் அனுப்பியுள்ளார். ஆனால் இதுவரை அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் துண்டு சீட்டுடன் கடலில் வீசப்பட்ட ப்ளாஸ்டிக் பாட்டில், 3800 கிலோமீட்டர் தூரம் கடந்து சிறுவன் கையில் கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்