முதலில் 'நிலவு'... அடுத்தது 'செவ்வாய்' ... விண்வெளி சுற்றுலாக்கு தயாராகும் இந்தியன்... நாசா அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா 2017-ல் விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்காக ஒரு தேர்வை நடத்தியது. இதில் 17 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதில் சிலரை மட்டும் தேர்வு செய்து கடந்த 2 வருடமாக நாசா பயிற்சி அளித்து வந்தது. அந்த பயிற்சியில் மொத்தம் 11 பேர் வெற்றிகரமாக பயிற்சியை முடித்துள்ளனர்.

முதலில் 'நிலவு'... அடுத்தது 'செவ்வாய்' ... விண்வெளி சுற்றுலாக்கு தயாராகும் இந்தியன்... நாசா அறிவிப்பு...!

இவர்கள் அனைவரும் நாசாவின் விண்வெளித் திட்டங்களில் இடம்பெறுவர். வரும் ஆண்டுகளில் நாசா செயல்படுத்தவுள்ள சர்வதேச விண்வெளி நிலைய பயணம், நிலவு, செவ்வாய்க்கிரக பயணம் ஆகியவற்றில் இவர்கள் இடம்பெறுவர்.

இந்த 11 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 41 வயதான ராஜா ஜான் உர்புத்தூர் சாரியும் ஒருவர். இவரது தந்தை நிவாஸ் சாரி ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். ஹைதராபாதில் இன்ஜினீயரிங் படித்து முடித்த அவர் உயர்கல்விக்காக அமெரிக்காவுக்கு வந்தார், அமெரிக்காவின் செடர் பால்ஸ் பகுதியைச் சேர்ந்த ஹாலி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிட்டார்.

அமெரிக்காவில் பிறந்த ராஜா ஜான் உர்புத்தூர் சாரி, அமெரிக்க விமானப் படையில் கர்னலாக பணிபுரிந்து வந்தார். கலிபோர்னியாவிலுள்ள எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளத்தில் 461-வது பிரிவில் பணிபுரிந்து வந்தார். முன்னதாக அமெரிக்க விமானப் படை அகாடமியில் படித்து பட்டம் பெற்றார். பின்னர் விண்வெளி வீரராக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க நாசா நடத்திய தேர்வில் பங்கேற்று தற்போது வெற்றிகரமாக 2 ஆண்டு பயிற்சியை முடித்துள்ளார்.

இதுகுறித்து ராஜா ஜான் உர்புத்தூர் சாரி கூறும்போது, “2017-ம் ஆண்டு ஆகஸ்டில் நாசாநடத்திய பயிற்சியில் சேர்ந்து தற்போது பயிற்சியை முடித்துள்ளேன். நாசாவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையப்பயணத்தில் நாங்கள் இடம்பெறுவோம் என்று நினைக்கிறேன். அதன்பிறகு நிலவு, செவ்வாய்க் கிரகப் பயணங்களுக்குத் தேர்வாவோம்.

எனது தந்தை நிவாஸ் சாரி, உயர்கல்வி பயில அமெரிக்கா வந்தார். பின்னர் இங்கேயே திருமணம் செய்து கொண்டு தங்கிவிட்டார். இளமையில் படிப்பில்தான் என்னுடைய முழு ஈடுபாடும் இருந்தது. அதனால்தான் தற்போது விண்வெளி வீரர் என்ற நிலைமைக்கு வர முடிந்தது” என்றார்.

வரும் 2024-ல் நிலவுக்கு முதல்முறையாக பெண்ணை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2030 வரை ஒவ்வொரு ஆண்டிலும் நாசா சார்பில் நிலவுப் பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாசா ஆராய்ச்சி நிலையம், விண்வெளியில் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அமைத்து வரும் நவம்பரில் 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன.

மேலும் ஆர்ட்டெமிஸ் திட்டம் என்ற திட்டத்தை நாசா செயல்படுத்தவுள்ளது. மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டம்தான் அது. அந்தத் திட்டத்தில் ராஜா ஜான் உர்புத்தூர் சாரியும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

NASA, MARS, MOON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்