'சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய 91 பேருக்கு மீண்டும் கொரோனா உறுதி!'... இந்த முறை தொற்று இல்லையாம்!... ஆய்வில் வெளியான புதிய தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் 91 பேருக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலையும், தாக்குதலையும் கட்டுப்படுத்துவதில் பல உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது, தென் கொரியா. தீவிர கண்காணிப்பு; தேடிச்சென்று பரிசோதனை என்ற திட்டத்தின் மூலம் தென் கொரிய அரசு, கொரோனா பரவலை வெகுவாக குறைத்துள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் 91 பேருக்கு மீண்டும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள  நிகழ்வு அங்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் நோய்த் தடுப்பு பிரிவு இயக்குனர் ஜியாங் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதற்கு வாய்ப்பில்லை. மாறாக, அவர்களின் உடலில் ஏற்கனவே செயலற்ற நிலையில் இருக்கும் சில வைரஸ்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கலாம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த மாதிரியான வைரஸ்கள் சம்பந்தப்பட்ட நபரையோ, அல்லது அவரது சுற்றத்தாரையோ பாதிக்கும் ஆற்றல் உடையனவாக இருக்காது. இதுகுறித்து நோய்க்கிருமி ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். மேலும், ஒருமுறை நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் உடலில் அந்த வைரஸை எதிர்த்து சண்டையிடும் நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகியிருக்கும் என்பதால், அவர்கள் வேறொருவர் மூலம் நோய்த்தொற்றுக்கு ஆளாக வாய்ப்பில்லை" என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, மற்றொரு தரப்பினர், மருத்துவ பரிசோதனை முடிவுகளில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும், கொரோனா அரக்கனை ஒழிக்க அனைத்து தளங்களிலும் தென் கொரிய அரசும், மருத்துவத்துறையும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்