'ஆப்பிளின் எடையை விட குறைவு'... '13 மாதம் இருந்த பதைபதைப்பு'... மருத்துவ உலகத்தை அசர வைத்த அதிசய குழந்தை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிறந்த குழந்தையின் எடை 212 கிராம் மட்டுமே இருந்தது.

சிங்கப்பூரைச் சேர்ந்த குவெக் வீ லியாங், வாங் மீ லிங் தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். 2-வது முறை கருவுற்ற வாங் மீ லிங், ப்ரீ க்ளம்ப்சியா என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து, சிறுநீர் வழியாக புரோட்டீன் அதிக அளவு வெளியேறியது.

இந்த பாதிப்பு காரணமாகக் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் 4 மாதங்களுக்கு முன்பாகவே குறைப்பிரசவத்தில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையின் எடை 212 கிராம் மட்டுமே இருந்தது. இதன் மூலம் உலகின் மிகச் சிறிய குழந்தை என அறிவிக்கப்பட்டது. இந்த குழந்தைக்கு குவெக் யூ சுவான் என்று பெயர் சூட்டப்பட்டது.

இது ஒருபுறம் இருக்கக் குழந்தையின் எடை குறைவாக இருப்பதால் குழந்தை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் கூறினர். எனினும் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் உயர் தரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தையின் பெற்றோரால் குழந்தையின் மருத்துவச் செலவை ஈடுகட்ட முடியவில்லை.

இதனால் பொது மக்களிடம் நிதி திரட்டி அதன்மூலம் குழந்தையின் மருத்துவச் செலவை மேற்கொள்ளப் பெற்றோர்கள் முடிவு செய்தார்கள். அதன்படி நிதி திரட்ட ஆரம்பித்த சில வாரங்களிலேயே ரூ.2 கோடிக்கும் அதிகமான நிதி சேர்ந்தது. மேலும் குழந்தையின் மருத்துவச் செலவுக்கு இதுவரை ரூ.1 கோடி செலவான நிலையில், மீதி பணத்தைத் தன்னார்வ அமைப்பிடம் திரும்ப அளித்துவிட்டனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் குழந்தையின் உடல்நலம் தேறி ஓரளவுக்கு ஆரோக்கியமாக உள்ளது. தற்போது குழந்தை எடை 6.3 கிலோவாக உள்ளது. 13 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூலை 9-ம் தேதி குழந்தையுடன் பெற்றோர் வீடு திரும்பினர். குழந்தைக்குச் சுவாசப் பிரச்சினை நீடிப்பதால் வீட்டில் வென்டிலேட்டர் உதவியுடன் குழந்தையைப் பராமரிக்க பெற்றோருக்குச்சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்