நடுங்க வைக்கும் 'அடுத்த' வைரஸ்...! 'இந்த வைரஸ' மட்டும் முளையிலேயே கிள்ளலன்னா... 'அப்புறம் கண்ட்ரோல் பண்ண சான்ஸே இல்ல...' - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மேற்கு ஆப்பிரிக்காவில் கினியாவில் மார்பர்க் வைரஸ் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்பர்க் வைரஸ், எபோலா வைரஸ் போல கொடிய வைரஸ் எனவும் அதன் அறிகுறிகள் ஒரு சேர இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இவை முதலில் தென்னாப்பிரிக்கா, அங்கோலா, கென்யா, உகாண்டா, காங்கோ ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டிருந்தாலும் மேற்கு ஆப்ரிக்காவில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும்.

மார்பர்க் வைரஸ், கடந்த ஜூலை 25-ஆம் தேதி கினியா நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு அதிக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் மருத்துவமனையில் சில நாட்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த பின்பு தான் உடற்கூறாய்வு மாதிரிகளை ஆய்வு செய்ததில், அவருக்கு மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

வௌவால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் இந்த மார்பர்க் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் உமிழ் நீர், வியர்வை, சிறுநீர் மூலம் பரவும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இறந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் 88% உயிரிழப்பு உறுதி. நோய் பாதிக்கப்பட்டோருக்கு அதிக காய்ச்சல், கடும் தலைவலி, உடல் அசதி, அசௌகரியம் போன்றவை அறிகுறிகளாக இருக்கும்.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும் போது, இந்த மார்பர்க் வைரஸ் பெரிய அளவில் பரவ வாய்ப்பிருப்பதால், அதன் பரவலை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மற்ற செய்திகள்