'கவுண்டன் ஸ்டார்ட்'... 'இந்தியாவை பெருமைப்படுத்த போகும் இந்த ஒற்றை பெயர்'... 'யார் இந்த சிரிஷா பாண்ட்லா'?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிரிஷா பாண்ட்லாவை மொத்த இந்தியாவும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

பிரிட்டிஷ் கோடீசுவரர் ரிச்சர்ட் பிரான்சன் நிறுவிய விண்வெளி சுற்றுலா நிறுவனம் விர்ஜின் கேலடிக். இந்த நிறுவனம் தனது முதல் சோதனை பயணமாக வரும் 11-ம் தேதி விண்வெளிக்குச் செல்லவிருக்கிறது. இந்தப் பயணத்தில் ஐந்து பேர் குழு முதல்முறையாக விண்வெளிக்குப் பறக்கிறது.

இந்தப் பயணத்தில் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணான சிரிஷா பாண்ட்லா என்பவர் பயணப்பட இருக்கிறார். கல்பனா சாவ்லாதான் விண்வெளிக்குச் சென்ற இந்தியாவில் பிறந்த முதல் பெண் வீரர். அவருக்குப் பிறகு இந்தியாவில் பிறந்த சிரிஷா பாண்ட்லா தான் தற்போது விண்வெளி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதன்மூலம் இந்தியாவில் பிறந்து விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆக இருக்கிறார் சிரிஷா பாண்ட்லா.

இந்தப் பயணத்துக்கு விர்ஜின் கேலடிக் நிறுவனத்தை நிறுவிய ரிச்சர்ட் பிரான்சன் தலைமை ஏற்பார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆந்திராவின் குண்டூரில் பிறந்தவர் சிரிஷா. என்றாலும் அவர் வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் டெக்சாஸின் ஹூஸ்டனில்தான். அமெரிக்காவில் கல்வியை முடித்தவர், அங்குள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

இதனிடையே தான் கடந்த 2015-ம் ஆண்டு ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த சிரிஷா தற்போது அந்த நிறுவனத்தின் அரசாங்க விவகாரங்களின் துணைத் தலைவர் பதவியை அலங்கரித்து வருகிறார். இந்த நிறுவனத்தில் இணைவதற்கு முன்னதாக டெக்சாஸில் விண்வெளி பொறியாளராகவும், வணிக விண்வெளிப் பயணக் கூட்டமைப்பில் (சி.எஸ்.எஃப்) விண்வெளி கொள்கை பிரிவிலும் பணிபுரிந்தார் என்று 'எகனாமிக் டைம்ஸ்' செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இதற்கிடையே, இன்னும் சில தினங்களில் இந்தியர்கள் பெருமைப்படப் போகும் வரலாற்றுச் சாதனையைப் படைக்கக் காத்திருக்கும் சிரிஷாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மற்ற செய்திகள்