செல்வச் செழிப்பில் மிதந்த... கோடீஸ்வர நாட்டுக்கு இப்படியொரு நிலையா!? அதலபாதாளத்தில் விழுந்த பொருளாதாரம்!.. அடிப்படை வரியே 3 மடங்கு உயர்வு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கச்சா எண்ணெய் வளத்தால் செல்வச்செழிப்பில் இருந்த சவுதி அரேபிய அரசு, அதலபாதாளத்துக்கு விலை வீழ்ந்ததாலும், கொரோனாவின் பாதிப்பாலும் வேறு வழியின்றி அரசின் செலவுகள், திட்டங்களில் 2,600 கோடி டாலர்களை (ரூ.19.68 லட்சம் கோடி) குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, வருவாய்க் குறைவு, பெட்ரோலியக் கச்சா எண்ணெய் இதுவரை இல்லாத அளவுக்கு சர்வதேசச் சந்தையில் மோசமாக வீழ்ச்சி அடைந்தது போன்றவற்றைச் சமாளிக்க முடியாமல் செல்வம் கொழிக்கும் சவுதி அரேபியா சிக்கனத்தில் இறங்கிவிட்டது.

அதன் விளைவாக, அடிப்படைப் பொருட்களுக்கான வரியை 3 மடங்காக அதாவது 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து சவுதி அரேபிய மக்கள் பெற்று வந்த வாழ்வாதாரத் தொகையையும் சவுதி அரசு நிறுத்தவுள்ளது.

சவுதி அரேபிய அரசின் பெரும்பகுதி வருவாய் கச்சா எண்ணெய் விற்பனையே நம்பியுள்ளது. ஆனால், பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் 30 டாலராகக் குறைந்துவிட்டதால், சவுதி அரேபியா தனது பட்ஜெட்டைச் சரிசெய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது.

இதுகுறித்து சவுதி அரேபிய அரசின் நிதியமைச்சர் முகமது அல் ஜத்தான் இன்று வெளியிட்ட அறிக்கையில், "நவீனகால வரலாற்றில் இதுபோன்று உலகம் சந்திக்காத மிகப்பெரிய சவாலான சிக்கல்களை நாமும் சந்தித்து வருகிறோம். நாட்டின் பொருளாதார நலன் கருதி சில கடினமான நடவடிக்கைகளை எடுக்கிறோம். முழுமையான நிதி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அது அத்தியாவசியமானது.

2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் அரசின் வருவாய், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 22 சதவீதம் குறைந்துவிட்டது. அதாவது 900 கோடி டாலர் பற்றாக்குறை நிலவுகிறது. கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயும் 24 சதவீதம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைந்துவிட்டது.

ஆதலால், அரசின் செலவிலிருந்து 2,600 கோடி டாலர்களை (10000 சவுதி ரியால்) குறைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், முகமது பின் சல்மானின் பொருளாதாரத் திட்டம் ஆகியவையும் நிறுத்தப்படுகிறது. மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாழ்வாதாரப் படிகளும் ஜூன் மாதத்திலிருந்து நிறுத்தப்படுகிறது.

இதன் மூலம் அரசுக்கு, ஆண்டுதோறும் 1350 கோடி டாலர் மிச்சமாகும். பொருட்களுக்கான அடிப்படை வரி ஜூலை மாதத்திலிருந்து 5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதேசமயம் சவுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். குறைந்த வருவாய் ஈட்டும் மக்களுக்காக மே மாதம் 50 லட்சம் டாலர்கள் ஏழை மக்கள் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடிஸ் ரேட்டிங் நிறுவனத்தின் கணிப்பில், சவுதி அரேபியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021-ம் ஆண்டு இறுதிக்குள் 48,800 கோடி டாலரிலிருந்து 37,500 டாலராகக் குறையும் எனத் தெரிவித்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்