'இந்த' போட்டோ நியாபகம் இருக்கா?.. இந்தியாவின் கொரோனா பாதிப்பை தோலுரித்துக் காட்டிய... செய்தியாளர் டேனிஷ் சித்திக் அதிர்ச்சி மரணம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் பிரபல புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக் இன்று கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து செய்திகள் வெளியிட்டு வந்த சித்திக் கங்கை நதிக்கு அருகே கொரோனா பிணங்கள் எரிக்கப்படுவதை புகைப்படமாக வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் உலகம் முழுக்க வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த ஏப்ரல் - மே மாதங்களில் கொரோனா கேஸ்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வந்தது. அப்போது கங்கை நதிக்கு அருகே பல இடங்களில் கொத்து கொத்தாக உடல்கள் எரிக்கப்பட்டன.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பல இடங்களில், குறிப்பாக கங்கை கரையில் பிணங்கள் எரிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதை அப்படியே புகைப்படமாக எடுத்து வெளியிட்டவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக்.

இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா மரணங்கள் குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள்தான் சர்வதேச மீடியாக்களை திரும்பி பார்க்கக் வைத்தது. உலக சுகாதார மையம் தொடங்கி பல நாடுகள் இந்தியாவின் கொரோனா பரவல் குறித்து கவனம் செலுத்தியது இவரின் புகைப்படங்கள் வெளியே வந்தபிறகு தான் என்று சொன்னால் அது மிகையல்ல. இந்தியாவின் இரண்டாம் அலை பாதிப்பை ஒரே போட்டோ மூலம் உலகிற்கே எடுத்துக்காட்டியவர் டேனிஷ் சித்திக்.

மும்பையைச் சேர்ந்த டேனிஷ் சித்திக் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், அங்கு நடக்கும் அரசியல் மாற்றங்களை செய்திகளாக வெளியிட்டு வந்தார். முக்கியமாக கந்தகாரில் தாலிபான் படைகள் முன்னேறி வருவதை இவர் நெருக்கமாக இருந்து படம்பிடித்து வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட கந்தகாரில் ஆப்கான் ராணுவத்தின் மீட்பு மிஷன் ஒன்றில் அவர்களோடு கலந்து கொண்டு நெருக்கமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார். ஆஃப்கான் ராணுவத்தோடு மீட்பு பணியில் செய்தி சேகரிக்க சென்று போது இவரின் கான்வாய் வாகனம் மூன்று நாட்களுக்கு முன்பே தாலிபான்களால் தாக்கப்பட்டது.

அப்போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டேனிஷ் சித்திக், தன்னுடைய அனுபவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்தார். ஆஃப்கான் படைகள் எப்படி செயல்படுகின்றன, மக்களை காக்க எவ்வளவு கஷ்டப்படுகின்றன என்றும் உருக்கமான செய்தியை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டி காட்டினார். மேலும், ஆஃப்கான் உள்நாட்டு போர் குறித்தும் புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்த நிலையில், கந்தகாரில் ஸ்பின் போட்லாக் என்ற பகுதியில் இன்று டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். ஆஃப்கான் ராணுவம் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு செய்தி சேகரித்துக்கொண்டிருந்த சித்திக் கொல்லப்பட்டார். உலகம் முழுக்க மதிக்கப்பட்ட இந்திய செய்தியாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்