ஒசாமா பின்லேடன் ஒரு ‘தியாகி’.. நாடாளுமன்றத்தில் ‘புகழ்ந்து’ பரபரப்பை கிளப்பிய பாகிஸ்தான் ‘பிரதமர்’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை ‘தியாகி’ என தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் தொடர்பாக மதிப்பீடு அறிக்கையை வெளியிட்டது. அதில், பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்குகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைத்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்தது.

இதற்கு அடுத்த நாள் வியாழனன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இதுதொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார். அதில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவியதற்காக என் நாடு அவமானத்தை சந்திக்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை ஆதரித்துவிட்டு, அதற்காக அவர்களிடமிருந்து விமர்சனத்தையும் பெறும் நாடு வேறு எதுவும் இருக்க முடியாது. ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது. அவர் ஒரு தியாகி. அமெரிக்கா நம் நாட்டிற்குள் நுழைந்து நம்மிடம் சொல்லாமல் ஒருவரை கொன்றது பெரிய அவமானம்’ என இம்ரான்கான் பேசியுள்ளார். இதற்கு பல தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தெரிவித்த பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்.பி ஷெர்ரி ரெஹ்மான்,  ‘ஒசாமா பின்லேடன் பிரதமருக்கு வேண்டுமானால் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு அவர் குற்றவாளி தான்’ என தெரிவித்தார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் கவாஜா ஆசிப் கூறுகையில், ‘எங்கள் மண்ணிற்கு பயங்கரவாதத்தை கொண்டு வந்தவர் ஒசாமா. அவர் என்றைக்கும் பயங்கரவாதிதான்’ என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்