என் ஷிப்டி முடிஞ்சிருச்சு.. திடீரென பாதி வழியில் விமானத்தை ஓட்ட மறுத்த பைலட்.. பரபரப்பு சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாதி வழியில் விமானத்தை ஓட்ட மாட்டேன் என்று விமானி கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நோக்கி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (PIA) விமானம் புறப்பட்டு வந்தது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மோசமான வானிலை நிலவியது. அதனால் சவுதியின் தம்மம் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வானிலை சீரடைந்ததும் விமானம் இஸ்லாமாபாத் புறப்படும் என பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர்ந்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வானிலை சீரடையவில்லை. அதற்குள் விமானியின் வேலை நேரம் (Shift) முடிந்துவிட்டது. தனக்கு அனுமதிக்கப்பட்ட வேலை நேரம் முடிந்துவிட்டதால், மேற்கொண்டு விமானத்தை தன்னால் இயக்க முடியாது என விமானி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், விமானத்தை விட்டு இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து உடனடியாக விமான நிலைய பாதுகாவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பயணிகளிடம் பேசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து விமானம் புறப்படும் வரை பயணிகள் அனைவரையும் ஓட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.
தனக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பணியாற்றிய பின் விமானி கண்டிப்பாக ஓய்வெடுக்க வேண்டும். ஏனெனில் அது விமானப் பாதுகாப்பிற்கு அவசியம் என விமான நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ், கடந்த ஆண்டுதான் சவுதி அரேபியாவிற்கு தனது விமானச் சேவையை விரிவுபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்