VIDEO: ‘அழகி பட்டம் கொடுத்த 2 நிமிடத்தில் பறிப்பு’!.. அழுதுகொண்டே வெளியேறிய பெண்.. மேடையில் ‘முன்னாள்’ அழகி சொன்ன பரபரப்பு தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அழகி பட்டம் கொடுத்த அடுத்த சில நிமிடங்களிலேயே பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2021-ம் ஆண்டுக்கான திருமதி இலங்கை போட்டி கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் புஷ்பிகா டி சில்வா என்பவர் ‘திருமதி இலங்கை அழகி’ ஆக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து மேடைக்கு வந்த கரோலின் ஜூரி (2019-ம் ஆண்டு திருமதி இலங்கை அழகி பட்டம் பெற்றவர்) புஷ்பிகா விவகாரத்து பெற்றவர், அதனால் இந்த பட்டத்தை பெற அவர் தகுதியற்றவர் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து புஷ்பிகாவிடம் இருந்து பட்டத்தை வேகமாக பறித்த கரோலின் ஜூரி, அதனை இரண்டாவது இடம் பிடித்தவருக்கு வழங்கினார். அழகி பட்டம் கொடுத்த 2 நிமிடங்களிலேயே பறிக்கப்பட்டதால் புஷ்பிகா கோபமடைந்தார். மேலும் வேகமாக கிரீடத்தை பறித்ததால் புஷ்பிகாவின் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அந்த இடத்தில் இருந்து அழுதுகொண்டே அவர் வெளியேறினார். இதுகுறித்து வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விசாரணையில் புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான் என்றும், ஆனால் விவாகரத்து ஆகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போட்டி அமைப்பாளர்கள் புஷ்பிகாவிடம் மன்னிப்பு கேட்டனர். மேலும் திருமதி இலங்கை அழகி பட்டமும் திரும்ப வழங்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய புஷ்பிகா, ‘எனது கிரீடத்தை திரும்ப பெற்றவர்கள் மீது எனக்கு எந்தவித கோபமும் கிடையாது. திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண்கள் உலகில் அதிகமாக உள்ளனர். இனிவரும் காலங்களில் அவர்களுக்காக குரல் எழுப்புவேன். விவாகரத்து பெற்ற பெண்கள், தனியாக சாதனைகளை படைக்கும்போது, அழகி போட்டிகளில் மட்டும் ஏன் அவர்கள் கலந்துக்கொள்ள கூடாது? வாழ்க்கையில் வீழ்ந்தபோதெல்லாம் என் பெற்றோரே எனக்கு ஒத்துழைப்பாக இருந்தனர்’ எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் உலகளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்