"மேட்ச் அப்போ அடுத்தடுத்து குண்டு வெடிச்சுது.. சிதறிய உடல்களை தூக்கிட்டு கேட் வரைக்கும் ஓடுனேன்.. அங்க என் கண் முன்னாடியே!!".. உருகிய வீரர்.. உலுக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் 2018-ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டியை ஏராளமான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது அங்கு நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் உடல் சிதறி பலியான 45 பேர் படுகாயம் அடைந்த கோர சம்பவம் நடைபெற்றது.

பலத்த சத்தத்துடன் திடீரென்று வெடிக்கத் தொடங்கிய குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததை அடுத்து இந்த சம்பவம் நடந்தது. இதில் பலியானவர்களில் அந்த கிரிக்கெட் போட்டியின் அமைப்பாளர் இதயத்துல்லா ஜாஹிர், ஜலாலாபாத் துணைமேயர் டாக்டர் நெக்மல் உள்ளிட்டோரும் அடங்குவர். இதில் மொத்தம் நான்கு குண்டுகள் வெடித்ததாகவும், இரண்டு குண்டுகள் மைதானத்துக்குள்ளும் இரண்டு குண்டுகள் மைதானத்திற்கு வெளியில் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. குண்டுவெடிப்பு நடந்தபோது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் கரீம் சாதிக் மைதானத்தில் இருந்துள்ளார். அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

இந்நிலையில் இதுபற்றி நினைவுகூர்ந்த கரீம் சாதிக், அன்றைய நாள்தான் தன் வாழ்க்கையின் மிக சிரமமான நாள் என்றும், இரு இரவு நேரத்தில் நடந்த அந்த விளையாட்டின்போது கடும் பசியில் வீரர்கள் ஆடிக்கொண்டிருந்ததாகவும், முதல் இன்னிங்ஸ் முடிந்ததும், தான் மைதானத்தை விட்டு வெளியேறியதாகவும், அங்கிருந்து நின்று விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்தபோது தன் கண் முன்பு இந்த கோர சம்பவம் நிகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன் பக்கம் குண்டு வீசப்பட்டதாகவும், மொத்த கூட்டமும் அலறியடித்துக்கொண்டு ஓடியதாகவும் பின்னர் படுகாயமடைந்த பலரையும் தான் சென்று தூக்கிக்கொண்டு கேட் பக்கம் சென்ற போது அங்கேயும் வெடிகுண்டு வெடித்ததாகவும், எனினும் முடிந்தவரை சிலரை தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்ற முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  இவ்வாறு கூறியவர் அந்த நாளில் இருந்து, கிரிக்கெட் மீதான ஆர்வத்தையே முற்றிலும் தான் இழந்துவிட்டதாகவும் தனது பால்ய நண்பர்கள் பலரையும் அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இழந்ததாகவும், அந்த நாளில் இருந்து தன் புன்னகையையும் இழந்ததாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்