மாணவ வலிமை இதுதான்! 36 வயதினிலே.. சிலே நாட்டின் அதிபர்.. கேப்ரியல் போரிக் யார்?
முகப்பு > செய்திகள் > உலகம்கேப்ரியல் போரிக் என்னும் 35 வயது இடதுசாரி வேட்பாளர் இன்று லத்தின் அமெரிக்க நாடு ஒன்றின் இளம் அதிபர் ஆகப் பதவி ஏற்றுள்ளார்.

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலே நாட்டின் இளம் அதிபர் ஆகப் பதவி ஏற்றுள்ளார் கேப்ரியல் போரிக். 35 வயது ஆகும் கேப்ரியல் முன்னாள் மாணவ அணித் தலைவர் ஆவார். ஒரு இடதுசாரி மாணவர் ஆக வளர்ந்த கேப்ரியல் இதற்கு முந்தைய சிலே அரசுக்கு எதிராகக் கடுமையான பல போராட்டங்களை நிகழ்த்தியவர்.
கேப்ரியல் தனக்கு எதிராகப் போராடிய தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மிகவும் பழமைவாய்ந்த வலௌதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஹோசே ஆன்டோனியோ காஸ்ட்-ஐ விட 12 சதவிகிதம் ஓட்டு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். இதுவரையில் 97 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் அதில் 55.8 சதவிகிதம் கேப்ரியல் வெற்றி பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை முழுவதுமாக முடிந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே கேப்ரியலுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் வலதுசாரி கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹோசே காஸ்ட். பின்னர் மக்களுடன் பேசிய கேப்ரியல் போரிக், “நமது தலைமுறையில் உரிமைகளை உரிமைகள் என்ற அடிப்படையின் கீழ் மட்டுமே மதிக்க வேண்டும் என நினைத்து வளர்ந்துள்ளோம். உரிமைகளை பிசினஸ் ஆகவும் பண்டமாற்று பொருளாகவும் பார்க்கக் கூடாது.
சிலே நாட்டில் நிலவும் சமன் அற்ற நிலையை இனியும் அனுமதிக்க முடியாது. வருங்காலம் நமக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. ஆனாலும், நமக்கு உள்ளதை அனைவரும் பகிர்ந்து நமக்கு நாமே உதவ வேண்டும். நிச்சயம் நிலையான வளர்ச்சி சிலே நாட்டுக்குக் கிடைக்கும்” எனக் கூடியிருந்தவர்களிடம் பேசினார்.
“நீதி, நேர்மை மற்றும் மரியாதை” இதுவே நமது தேவை, கொள்கை எனக் குறிப்பிட்டு மக்களின் கைதட்டல்களுக்கு மத்தியில் தனது உரையை நிறைவு செய்தார் கேப்ரியக். ஒரு மாணவ அரசியல் குழுத் தலைவர் ஆக இருந்தவர் இன்று நாட்டின் அதிபர் ஆக உயர்ந்துள்ளார். சிலே நாட்டின் தென் கோடி பகுதியான புன்டா அரேனாஸ் என்ற பகுதியில் பிறந்தவருக்கு இன்று அதிபர் தேர்தலின் மூலம் அந்நாட்டு மக்கள் மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு மாணவர் இயக்கம் மூலம் பொது அரசியலில் தனது பயணத்தைத் தொடங்கியவர் கேப்ரியல். 2019-ம் ஆண்டு அரசுக்கு எதிராக நிகழ்ந்த மாபெரும் போராட்டத்துக்கு அடுத்து சிலே அரசியல் சட்ட அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தான் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஒரு இளம் அதிபர் அந்நாட்டுக்கு அதிபர் ஆகக் கிடைத்துள்ளார் என அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்