'அவர் மாஸ், அவரு கெத்துன்னு சொல்லி நல்லா வச்சி செஞ்சிட்டாங்களே'... 'மரண அடியை கொடுத்த தேர்தல் முடிவு'... ஜெயிச்சாலும் நிறைவேறாமல் போன ஆசை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடாவில் நேற்று நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

  உலக அளவில் சில நாட்டின் தேர்தல் முடிவுகள் என்பது அந்த நாட்டினை தாண்டி உலக அளவில் பல நாடுகளால் உற்று நோக்கப்படும். அந்த தேர்தல் முடிவுகள் என்பது சர்வதேச அளவில் நாடுகளுக்கிடையிலான உறவில் கூட பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் கனடா நாட்டின் தேர்தல் முடிவுகள் பெரும் கவனத்தை ஈர்த்து வந்தது.

அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு (Justin Trudeau) கனடாவை தாண்டி உலக அளவில் ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம். சொல்லப்போனால் இந்தியாவில் ஜஸ்டின் ட்ரூடோ குறித்த செய்திகளைப் படிப்பதும், அவரின் அசைவுகளை அறிந்து கொள்வதும் என்பது நெட்டிசன்களுக்கு அலாதி பிரியம். இதனிடையே கனடாவில் வழக்கமாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போக, ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனால் ஜஸ்டின் கடந்த 2 ஆண்டுகளாகக் கனடாவின் பிரதமராக ஆட்சி செய்து வந்தார். அதே நேரத்தில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல. அது கத்தியின் மீது நடப்பதற்குச் சமம்.

வெளி உலகில் ஜஸ்டின் மீது நல்ல மதிப்பும், நல்ல அபிமானமும் இருக்கும் நிலையில் சொந்த நாட்டில் காட்சிகள் வேறு விதத்தில் இருந்தது. அவரது அரசின் மீதான ஊழல் புகார், மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் போனது போன்ற காரணங்களால், கடந்த தேர்தலில் அவர் எதிர்பார்த்தது போலத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அப்போது தான் உலகையே புரட்டிப்போட்ட கொரோனாவும் வந்தது. கொரோனாவால் உலக பொருளாதாரமே பெரும் ஆட்டத்தைக் கண்ட நிலையில், பல நாடுகள் கொரோனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறின. ஏன், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து கூட கொரோனவை தடுக்க முடியாமல் திணறி வந்த நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளித்த விதம் அவருக்கு பெரும் நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது.

இது தான் சரியான நேரம், இந்த நல்ல பெயரை அப்படியே வாக்குகளாக மற்ற வேண்டும், கடந்த முறை போல இந்த முறை வாய்ப்பை தவற விட்டு விடக் கூடாது. தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆசையில் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சியைக் கலைத்து, முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்ள அவர் தயாரானார்.

அதன்படி கனடா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, செப்டம்பர் 20ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. . கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதில் ஆளும் லிபரல் கட்சி சார்பில் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எரின் ஓ டூல் களமிறங்கினர். ஆனால் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் ஜஸ்டினின் கனவில் மண்ணை அள்ளி போட்டது.

மக்களிடையே ஜஸ்டினுக்குப் பெரிய செல்வாக்கு இல்லை என்றும், போட்டி கடுமையாக இருக்கும் எனவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. இந்நிலையில் கனடா பொதுத்தேர்தல் நேற்று முடிந்த நிலையில், உடனே முடிவுகள் வெளியாகின. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தேர்தலில் மூன்றாவது முறையாக வென்று, வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

ஆனால் அவர் என்ன நோக்கத்திற்காக நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினாரோ அது நிறைவேறாமலே போனது. இந்த முறையும் பெரும்பான்மை கிடைக்காமல் சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்கும் நிலைக்கு ஜஸ்டின் ட்ரூடோ தள்ளப்பட்டுள்ளார். இன்னும் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில், லிபரல் கட்சி 156 இடங்களிலும், கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

தனிப்பெரும்பான்மை பெற 170 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி 156 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதனால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஜஸ்டின் சிறுபான்மை அரசின் பிரதமராகவே தொடரப் போகிறார். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக முழுமையான முடிவுகள் வெளிவந்த பின்னர் தான் முழுமையான நிலவரம் தெரிய வரும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்