'Baby உன்கூட 100 வருஷம் வாழணும்'... 'இதே டயலாக் 35 பேருக்கு'... 'வருடத்தில் 35 பிறந்த நாள்'... சிக்காமல் திரிந்த சில்லு வண்டு சிக்கியதன் சுவாரசிய பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆண்டுக்கு 35 பிறந்த நாள் கொண்டாடி இளைஞர் ஒருவர் 35 பெண்களைக் காதலித்து ஏமாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் விரும்பிய காதலியையோ அல்லது காதலனையோ கரம் பிடிக்க முடியாமல் பலர் தவிப்பது பார்த்திருப்போம். ஆனால் ஒரே நேரத்தில் 35 பெண்களைக் காதலித்து அதுவும் யாருக்கும் சிறிதும் சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்ட இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் கன்சாய் மாகாணத்தைச் சேர்ந்தவர் Takashi Miyagawa.
இவர் பெண்களிடம் நட்பாகப் பேசி அவர்களின் நம்பிக்கையைப் பெறுவார். பின்னர் அந்த பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தும் Takashi, உன்னை உருகி உருகி காதலிக்கிறேன் என ஆசை வார்த்தைகளை அள்ளி விடுவார். அந்த பெண்களும் இவரது ஆசை வார்த்தையில் மயங்கும் நிலையில், தனக்கு வேண்டிய காரியங்கள் அனைத்தையும் Takashi சாதித்துக் கொள்வர்.
ஒரு கட்டத்தில் எனக்கு இன்று பிறந்த நாள் எனக் கூறும் Takashiக்கு, அவரது காதலி ஆசை ஆசையாகப் பிறந்த நாள் பரிசுகளை வாங்கி கொடுப்பார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் வற்புறுத்தும் நிலையில், ஏதாவது காரணத்தைச் சொல்லி அந்த பெண்ணிடம் இருந்து பிரித்துச் சென்று விடுவார் Takashi. அந்த வகையில் Takashi 35 பெண்களிடம் தனது காதல் நாடகத்தை நடத்தியுள்ளார்.
35 பெண்களை ஒரே நேரத்தில் ரகசியமாகக் காதலித்து வந்த Takashi அவர்களிடம் 35 வித்தியாசமான பிறந்த நாள் தேதிகளைத் தெரிவித்து சுமார் 950 டொலர் அளவுக்குப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒவ்வொரு காதலியிடமும் உன்னோடு நான் 100 வருடம் வாழ வேண்டும் எனக் காதல் வசனங்களைப் பொழிந்துள்ளார். தமது காதலிகளிடம் இருந்து சுமார் 300 டொலர் தொகை அளவுக்கு புதிய உடைகளாகவும் சுமார் 100 டொலர் அளவுக்கு வாழ்த்து அட்டைகளையும் பெற்றுள்ளார்.
ஆனால் Takashi போலீசாரிடம் சிக்கியதன் பின்னணி தான் மிகவும் சுவாரசியமானது. Takashi காதலித்த பெண்கள் தங்களைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய நேரத்தில் அவர்களைக் கழற்றி விட்டுள்ளார். இதனால் தங்களை Takashi ஏமாற்றி விட்டதாக தங்கள் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இவ்வாறு 35 பெண்களில் சில பெண்கள் வெவ்வேறு காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், எதேச்சையாக போலீசார் ஒரே நபரின் புகைப்படம் பல காவல்நிலையங்களில் இருக்கிறதே எனச் சந்தேகப்பட்டு விசாரித்தபோது தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
தற்போது Takashi கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் வேறு ஏதாவது பெண்களையும் ஏமாற்றியுள்ளாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மற்ற செய்திகள்