Video: கொரோனா வைரஸால் 'இறந்த'... சகோதரி 'உடலுடன்' 36 மணி நேரம்... கதறி 'வீடியோ' வெளியிட்ட நடிகர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இறந்து போன சகோதரி உடலுடன் 36 மணி நேரம் தவித்ததாக, இத்தாலி நாட்டு நடிகர் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இத்தாலியை சேர்ந்த தெரசா பெரான்சிஸ் என்னும் 47 வயது பெண்மணி ஒருவர் கடந்த சனிக்கிழமை இறந்து விட்டார். தெரசாவுக்கு கை,கால் வலிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இறப்பதற்கு முன் அவரது உடலில் கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டு இருக்கின்றன. அவருக்கு கொரோனா வைரஸ் இருந்ததா? என்பதற்கான சோதனை முடிவுகள் வெளியாகும் முன்பே அவர் இறந்து விட்டார். இதனால் சுகாதார பணியாளர்கள் அவரது உடலை எடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரது சகோதரரும், தொலைக்காட்சி நடிகருமான லூகா பிரான்சிஸ் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அவர் தன்னுடைய வீடியோவில், ''நேற்றிரவு என்னுடைய சகோதரி இறந்து விட்டார். அவர் கொரோனா வைரஸால் இறந்தார் என்று நினைக்கிறேன். நேற்றிரவு முதல் நான் பதில்களுக்காக காத்திருக்கிறேன். அவர் இறந்த பிறகு அவரை சோதனை செய்யும்படி அதிகாரிகளை நான் கட்டாயப்படுத்த வேண்டி இருந்தது. இத்தாலி எங்களை கைவிட்டு விட்டது. ஆனால் நாம் ஒருவருக்கொருவர் இணைந்திருக்க வேண்டும். தயவுசெய்து இந்த வீடியோவை அனைவரும் பகிருங்கள்,'' என சோகத்துடன் தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து தன்னுடைய சகோதரி கொரோனா வைரஸால் இறந்தார் என்பதையும் அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து பாதுகாப்பு கவசங்களை அணிந்த ஊழியர்கள் வந்து அவரது உடலை எடுத்து சென்று,அங்குள்ள கல்லறை ஒன்றில் அடக்கம் செய்தனர். தெரசாவின் பெற்றோர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கும் கொரோனா இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அவரது வீட்டில் இருந்து எந்தவொரு நபரும் அதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியின் தெற்கில் உள்ள காம்பானியா பகுதியில் இதுவரை தெரசாவுடன் சேர்த்து மொத்தம் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் இதுவரை அப்பகுதியில் சுமார் 122 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகிள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை  827-ல் இருந்து 1,016 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,462-ல் இருந்து 15,113 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்