50,000 செல்போன்கள் 'ஹேக்' செய்யப்பட்டு 'தகவல்கள்' திருட்டு...! அந்த 'லிஸ்ட்ல' இந்தியால 'யாரெல்லாம்' இருக்காங்க...? இதெல்லாம் 'யாரோட' வேலை...? வெளியாகியுள்ள அதிர வைக்கும் தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் (Pegasus) என்ற ஸ்பைவேர் மூலமாக இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல பேரின் செல்போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், விஞ்ஞானிகள், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளின் கைப்பேசியை இஸ்ரேலின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஹேக் செய்து தகவல்களை எடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த நாற்பது ஊடகவியலாளர்கள் உட்படப் பலர் அடங்கியுள்ளனர். 21 நாடுகளை சேர்ந்த இருநூறு ஊடகவியாலாளர்களின் பெயர்கள் அந்த கண்காணிப்பு பட்டியலில் இருக்கிறது.
பெகாசஸ் என்ற ஸ்பைவேரை உருவாக்கிய NSO எனும் இஸ்ரேலிய நிறுவனத்தால் உலகெங்கிலும் கண்காணிப்புக்கு உட்பட்டதாகக் கருதப்படும் 50,000 செல்போன் மற்றும் தொலைபேசி எண்களின் தகவல்கள் கசிந்துள்ளது. இந்த விவரங்களை பிரான்சை சேர்ந்த லாபநோக்கற்ற ஊடக நிறுவனமான `ஃபார்பிட்டன் ஸ்டோரிஸ்` (Forbidden Stories) கண்டறிந்து தகவலை வெளியிட்டுள்ளது.
பெகாசஸ் சாப்ட்வேர் பயங்கரவாதிகளுக்கு எதிரான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும், இது நல்ல மனித உரிமை பதிவுகளைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவம், சட்ட அமலாக்க மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் NSO தெரிவித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த 40 ஊடகவியலாளர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், இரு மத்திய அமைச்சர்கள் மற்றும் பல தொழிலதிபர்களின் செல்போன் பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, நெட்வர்க் 18, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற செய்தி நிறுவனங்களின் பணியாற்றும் முன்னணி பத்திரிக்கையாளர்கள் கண்காணிக்கப்பட்டதாக 'தி வயர்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், நியூயார்க் டைம்ஸ், அல் ஜசீரா உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்களின் செல்போன் உரையாடல்களையும் ஹேக் செய்து எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியா, அஜர்பைஜான், பஹ்ரைன், ஹங்கேரி, கஜகஸ்தான், மெக்ஸிகோ, மொராக்கோ, ருவாண்டா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தான் அதிகமான தகவல்களை ஹேக் செய்துள்ளது.
பெகாசஸ் மூலம் 1,400 கைபேசிகளில் சைபர் தாக்குதல் நடத்தியதாகக் கடந்த 2019-ம் ஆண்டு என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக வாட்ஸ்ஆப் நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. ஆனால், NSO எந்த தவறும் செய்யவில்லை என தொடர்ந்து மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்