'கொரோனா கொஞ்சம் தள்ளி போய் விளையாடு பா'... 'உலகையே திரும்பி பார்க்க வைத்த இஸ்ரேல்'... வெற்றியின் பின்னணியில் ஒரே ஒரு மந்திரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இஸ்ரேல் கொரோனவை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தது எது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்திக் குறிப்பு.

உலகையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா, இந்தியாவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது என்றே சொல்லலாம். கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் தங்கள் நாடானது கொரோனாவை வென்ற நாடு' என உலகுக்கு உணர்த்தும் வகையில், அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இஸ்ரேலின் பலதரப்பட்ட மக்கள் தங்களின் மாஸ்கை கழற்றி வீசும் வகையிலான வீடியோ ஒன்றை சில தினங்களுக்கு முன், அந்நாட்டு அரசே பதிவிட்டிருந்தது.

'இனி மாஸ்க் அணியும் நிர்ப்பந்தம் தங்களுக்கு இல்லை' என்பதை அவர்கள் அவ்வாறு குறிப்பால் உணர்த்தியிருந்தனர். இஸ்ரேல் என்னதான் மாஸ்க் பயன்பாட்டைக் குறைத்தாலும், இப்போதும் இஸ்ரேல் ஒரு சில கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறது. அதில் முதன்மையானது, தடுப்பூசி பயன்பாடு. ஆம், இஸ்ரேல் கொரோனவை வெல்லப் பயன்படுத்திய முக்கிய ஆயுதம் தான் தடுப்பூசி.

இஸ்ரேல் மக்கள் தொகையில் 81 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் 16 வயதுக்கு மேற்பட்டோர். இவர்கள் அனைவருக்கும்தான், அந்நாட்டு அரசு தடுப்பூசி போட்டுள்ளது. சில சதவிகிதத்தினர், தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலும் இருக்கின்றார்கள். ஆனால், பெரும்பான்மையானோர் போட்டுக்கொண்டதால், நாட்டில் ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் 'குழு நோய் எதிர்ப்புச் சக்தி' கிடைத்திருக்கிறது என மருத்துவர்கள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டில் பி-பிசர் மற்றும் பயோ-என்-டெக் ஆகிய தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 2021-ல்தான் இஸ்ரேலில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடப்படும் பணிகள் தொடங்கப்பட்டன என்றாலும்கூட, இஸ்ரேலில் மக்கள் தொகை குறைவு என்பதால், இந்தக் குறுகிய காலகட்டத்தில் அந்நாட்டு அரசு பெரும்பான்மை மக்களுக்குத் தடுப்பூசியை விநியோகித்துவிட்டது எனச் சொல்லப்படுகிறது.

இதனிடையே பலருக்குத் தடுப்பூசி போட்டாலும், மாஸ்க் பயன்படுத்த வேண்டாம் எனச் சொன்னாலும் இஸ்ரேல் சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக அவசியமில்லா காரணத்துக்காக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்குத் தடை விதித்திருப்பதோடு, தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இஸ்ரேலைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் சொந்த நாட்டுக்கு எந்தவகையில் வந்தாலும், அவர்களுக்கு 2 வாரத் தனிமைப்படுத்துதலைக் கட்டாயமாக்கியுள்ளது அந்நாட்டு அரசு.

தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா, தங்கள் நாட்டுக்குள் வந்துவிடாதபடி தங்களைக் கவனித்துக்கொண்டு இருக்கிறது இஸ்ரேல். உதாரணத்துக்கு, இப்போது இந்தியாவைத் தாக்கிவரும் கொரோனா பற்றி அறிந்துகொண்டு, அது தங்கள் நாட்டுக்குள் வராமல் இருக்கப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இஸ்ரேல் அரசின் அயராத முயற்சியினால் கொரோனாவை வென்றுவிட்டதைத் தொடர்ந்து, மக்கள் கூட்டத்துக்கான தடைகள் அங்குத் தளர்த்தப்பட்டு இருக்கின்றன. இஸ்ரேலில் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அங்கு பொது இடங்கள் அனைத்திலும் மக்கள் தடையின்றி அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையே இஸ்ரேலில் இன்னும் சில பெரியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களைத் தடுப்பூசி போட வைப்பதற்காக இஸ்ரேல் அரசாங்கம் ஒரு நூதன வழியை கடைப்பிடித்து வருகிறது. அதாவது தடுப்பூசி போட்டவர்களுக்கு அதிக சலுகை வழங்குவது. உதாரணத்துக்கு, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களால் மட்டும்தான், பொது இடங்களில் அனைத்துவித உரிமைகளையும் எடுத்துக்கொள்ள முடியும். இவர்களுக்கு மட்டும்தான் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடும் உரிமையுண்டு.

அதேபோல இவர்களால்தான் கேளிக்கை விடுதிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும். இதில் தடுப்பூசி போட்டுக்கொண்டவரைத் தனியாக அடையாளம் காண வேண்டும் என்பதால், 'க்ரீன் பாஸ்' என்ற பெயரில் ஓர் அடையாள அட்டையை அந்நாட்டு அரசாங்கம் வழங்கி வருகிறது. இந்த அடையாள அட்டை இருப்பவருக்கு மட்டுமே சலுகை வழங்கப்படுகிறது.

எனவே, இந்த சலுகைகளுக்காகவே தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பெரியவர்களும், இப்போது போட்டுக்கொள்கின்றனர். எனவே இஸ்ரேல் கொரோனவை வென்றதற்கு அவர்களின் ஒரே மந்திரம் தடுப்பூசி மட்டுமே. அதோடு கடந்த மாதங்களில் அவர்கள் அமல்படுத்திய முழு முடக்க நடவடிக்கைகள், இப்போது அவர்கள் கடைப்பிடிக்கும் பயண கட்டுப்பாடுகள் போன்றவையும் கொரோனவை வெல்ல உறுதுணையாக இருந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்