சுட்டு 'வீழ்த்த' உத்தரவிட்ட டிரம்ப்... 'வெற்றிகரமாக' விண்ணில் பாய்ந்த செயற்கைக்கோள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவுக்கு மத்தியிலும் கொஞ்சம் கூட அமெரிக்கா-ஈரான் இடையிலான சண்டை ஓய்வதாக இல்லை.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஈரான் ராணுவத்தளபதியை சுட்டுக்கொன்றதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இதற்கிடையில் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''ஆயுதம் ஏந்திய ஈரானிய படகுகள் அமெரிக்க கப்பல்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினால், அவைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன்,'' என்று தெரிவித்து இருந்தார்.

பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 6 கப்பல்களை ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய ரக படகுகள் சுற்றி வளைத்ததை அடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்தார். பதிலுக்கு ஈரான் செய்தித்தொடர்பாளர், ''அமெரிக்கா மற்றவர்களை வம்புக்கு இழுப்பதை விட்டுவிட்டு அவர்கள் படையில் இருக்கும் வீரர்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற வேண்டும்,'' என கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் ஈரான் வெற்றிகரமாக 'நூர்' என்ற ராணுவ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. 4 முறை இந்த முயற்சியில் தோல்வியை சந்தித்த ஈரான் தற்போது வெற்றிக்கனியை பறித்துள்ளது. இலக்கை வெற்றிகரமாக அடைந்த செயற்கைகோள், புவி வட்டப்பாதையில் 425 கி.மீ தொலைவில் சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 10 நாடுகளில் ஈரானும் ஒன்று. மறுபுறம் அமெரிக்காவுடனான முட்டல், மோதல்களுக்கும் பஞ்சமில்லை. இதற்கு மத்தியிலும் ஈரான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்