'தயவு செய்து ஜாக்கிரதையாக இருங்கள்'!.. பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை... தீவிரவாதம் சுரண்டிக்கொள்ளும் அபாயம்!.. ஏன்? எப்படி?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நாடுகளிலும் தொழில் நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொழில் துறையை முடுக்கிவிடுவது தொடர்பாக சர்வதேச நிதி அமைப்புகள் பல்வேறு மானிய உதவிகளை அளிப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன.

இத்தகைய நிதி உதவிகளை தீவிரவாதக் குழுக்கள் பயன்படுத்திக் கொள்ளும் அபாயம் உள்ளதாக சர்வதேச அளவில் செயல்படும் நிதி செயல் திட்டக் குழு (எப்ஏடிஎப்) எச்சரித்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வளர்ந்த நாடுகள் அளிக்கும் நிதிச்சலுகைகள், பணப்புழக்கத்தை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை தீவிரவாதக் குழுக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தீவிரவாதக் குழுக்கள் தங்களது நிதியை ரியல் எஸ்டேட் சார்ந்த தொழிலில் முதலீடு செய்கின்றன. பொருளாதார நடவடிக்கைள் வளர்ச்சியடையும் போது ரியல் எஸ்டேட் துறையும் வளரும். இதன் மூலம் தங்களது பணத்தை பலமடங்கு அதிகரித்து, அதன்மூலம் தங்கள் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதே இவர்களது செயல்திட்டமாக அமைந்துள்ளது. இத்தகைய சூழலில், முடங்கியுள்ள ரியல் எஸ்டேட் சார்ந்த தொழிலுக்கு அரசுகள் அளிக்கும் சலுகைகள் இந்தக் குழுக்களுக்கும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களது நிதிச்சுமையை குறைத்துக் கொள்ள தனி நபர் மட்டுமின்றி நிறுவனங்களும் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனால் வரி ஏய்ப்பு சார்ந்த குற்றங்களும் அதிகரிக்கும். பெரும்பாலான நாடுகளில் கரன்சிகள் அதிகளவில் எடுக்கப்பட்டுள்ளன. இவையும் குற்றம் புரிவோர், தீவிரவாதிகள் தங்களது முறைகேடான பணத்தை மறு முதலீடு செய்ய வாய்ப்பாக அமையும் என்றும் அது எச்சரித்துள்ளது. இவ்விதம் ரொக்கமாக எடுக்கப்பட்ட நிதி மூலம் தங்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத முதலீடாக தங்கம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

சில நாடுகளில் இப்போதே மோசடியாக நிதி வசூலிக்கும் நடவடிக்கைகளில் சில குழுக்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இக்குழுக்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை நிதி என்ற பெயரிலும், மருத்துவ ஆராய்ச்சிக்கு என்ற பெயரிலும் நிதி வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

உலகம் முழுவதும் முடங்கியுள்ளதால்தீவிரவாத குழுக்களுக்கு செல்லும் நிதி மற்றும் அந்நிய செலாவணி மோசடி தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் அமைப்புகளின் செயல்பாடுகளில் தொய்வு காணப்படுகிறது. இதை தங்களுக்கு சாதமாக பல்வேறு தீவிரவாத குழுக்களும் பயன்படுத்திக் கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்