'லட்சத்தில் ஒருவருக்கு வரும் அரிதான நோய்'... 'உயிருக்குப் போராடும் இந்தியப் பெண்'... 'இங்கிலாந்தில் வருங்கால மனைவிக்காக போராட்டம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அரிதான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் இந்திய இளம்பெண், அங்கிருந்து வெளியேற்றப்படுவதை எதிர்த்து வருங்கால கணவருடன் சேர்ந்து போராடி வருகிறார்.

இந்தியாவைச் சேர்ந்த பெண் பவானி எஸபாதி. கல்வி விசாவில் 2010-ம் ஆண்டு இங்கிலாந்து சென்றுள்ளார். தனது படிப்பை முடித்த பிறகு, அங்கேயே வேலைக்கும் சேர்ந்துள்ளார். ஆனால், வேலைக்குச் சேர்ந்த அவர் குரோன்ஸ் எனப்படும் உடல் செரிமான கோளாறு அதாவது பெருங்குடல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நோய் லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் மர்மமான நோய் என்பதால், படுத்த படுக்கையானார்.

கடந்த ஆண்டு முதல் இந்த நோய்க்காக இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, இவரது விசா காலம் முடிந்துவிட்டது. விசா காலம் முடிந்ததால் கடந்த ஆண்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போதே, விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். இரண்டு மாத பரிசீலனைக்குப் பிறகு இங்கிலாந்து அரசின் உள்துறை அமைச்சகம் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது.

கூடவே பவானி இங்கிலாந்தைவிட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரால் பயணம் செய்ய முடியாது. அவர் உடல் இருக்கும் நிலைக்குப் பயணம் செய்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால், `இதையெல்லாம் ஒரு காரணமாக ஏற்க முடியாது. பவானி உடனடியாக இங்கிலாந்தைவிட்டு வெளியேற வேண்டும்' எனக் கூறி அந்நாட்டு அரசு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் செய்வது அறியாமல் திகைத்து வரும் பவானி, `இந்தியாவில் இந்த நோய்க்கான மருத்துவ வசதிகள் இல்லை. அதனாலேயே இங்கு தங்கியுள்ளேன். என் விண்ணப்பத்தை மறுக்க மாட்டார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால், எனது கோரிக்கையை ஒரு காரணமாக ஏற்க முடியாது என அவர்கள் கூறுவார்கள் என ஒருபோதும் நினைக்கவில்லை. அவர்கள் என்னை நேரில் பார்த்தார்கள் என்றால் விமானத்தில் என்னை ஏற்றமாட்டார்கள்' எனக் கூறியிருந்தார்.

இதற்கிடையே, அரசு நோட்டீஸ் அனுப்பிய சில நாள்களுக்குப் பின் பவானிக்கு அறுவைசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதற்குப் பிறகு ஒரு வாரத்துக்கும் மேலாகக் கோமாவில் இருந்து வருகிறார். இருந்தும் அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என இங்கிலாந்து அரசு கூறி வருகிறது. அவருக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற முடியாது எனவும் கூறியுள்ளது. இங்கிலாந்து அரசின் இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார் அவரின் வருங்கால கணவரான மார்ட்டின்.

`பவானி உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். அவள் பயணம் செய்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இப்படியான நிலையில் அரசின் செயல்பாடு கருணையற்றதாகவும் மனித தன்மை இல்லாததாகவும் உள்ளது என மார்ட்டின் கூறியுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பவானியின் விண்ணப்பத்தை மீண்டும் மீளாய்வு செய்வதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ENGLAND, CROHNS, DISEASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்