'புதிய வீட்டிற்கு மாறிய மாணவி'... 'திடீரென வந்த ஐடியா'... பத்தாம் வகுப்பு மாணவி செய்த அசத்தல் விஷயம்!
முகப்பு > செய்திகள் > உலகம்தற்போதைய சூழலில் தொழில்நுட்பத்தையும், மனிதனையும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. ஆனால் ஒருபுறம் தொழில்நுட்பங்கள் நவீனமாகிக்கொண்டே செல்ல மறுபுறம் மின்னணு கழிவுகள் அதிகமாகிக்கொண்டே செல்கின்றன. அந்த வகையில் 10ம் வகுப்பு மாணவி செய்த செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
துபாய் நாட்டில் வசித்து வரும் இந்திய மாணவி ரிவா துல்புலே. இவர் தற்போது 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வீட்டிற்கு மாறும்போது அதிகமான பயன்படுத்தப்படாத மின்னணு பொருள்கள் இருப்பதைக் கவனித்துள்ளார். இந்த சம்பவம்தான் `WeCareDXB’ என்ற மின்னணு மறுசுழற்சி தொடர்பான பிரசாரத்தை அவர் முன்னெடுக்கக் காரணமாக அமைந்துள்ளது.
2016 ஆம் ஆண்டு ரிவா தன்னுடைய பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். சுமார் 4 ஆண்டுகளில் சுமார் 25 டன் மின் கழிவுகளை அவர் சேகரித்ததாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ரிவா, ''எனது அம்மாவிடம் தேவையில்லாத மின்னணு பொருள்களை ஏன் வெளியேற்ற முடியாது என்று கேட்டேன். அதற்கு அவர், `இந்த பொருள்களைக் கையாள தனிக்கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதில் கூறினார்.
ஆனால், அதனைச் சரியாக எப்படிச் செய்வது என எங்களுக்குத் தெரியவில்லை. இது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. உடனே அது தொடர்பாகச் செய்த ஆராய்ச்சி தான் மறுசுழற்சி தொடர்பான பிரசாரத்தை மேற்கொள்ள வழிகாட்டியது. மின்னணு சாதனங்களை மறுசுழற்சி செய்வது குறித்து பலருக்கும் தெரியாததால் அதனைப் பொதுவெளியில் கொட்டுகிறார்கள்” என்றார்.
WeCareDXB’ என்ற தலைப்பின் கீழ் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தளங்களின் வழியாகப் பிரசாரத்தை மேற்கொண்டார். இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் இறுதி வரையில் சுமார் 2000 உடைந்த லேப்டாப்கள், மொபைல் போன்கள், பிரிண்டர்கள், கீ போர்டுகள் உள்ளிட்ட பல பொருள்களைச் சேகரித்துள்ளார்.
சேகரித்த பொருள்களை மறுசுழற்சி செய்யத் துபாயைச் சேர்ந்த மறுசுழற்சி நிறுவனம் ஒன்றையும் அவர் தொடர்பு கொண்டுள்ளார். இந்த மிகப்பெரிய முன்னெடுப்பைச் செய்த ரிவாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
மற்ற செய்திகள்