Imran Khan : "கடவுள் தான் பாகிஸ்தானை காப்பாத்தணும்".. இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு.. பாக். கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் போட்ட உருக்கமான ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதையடுத்து அந்நாட்டு கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | இம்ரான் கான் மீது பாய்ந்த துப்பாக்கிக்குண்டு.. பேரணியில் நடந்த விபரீதம்.. உச்சகட்ட பதற்றத்தில் பாகிஸ்தான்..!

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. இதனை தொடர்ந்து இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப் பெறுவதாக அறிவித்தன. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்திருந்த நிலையில் கடந்த ஏப்ரலில் பதவி விலகினார் இம்ரான் கான்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்-ன் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளும் ஷெபாஸ் ஷெரீப் -ன் கட்சி சுமத்திவந்தது. இதன் காரணமாக இம்ரானின் எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ய அந்நாட்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனை எதிர்த்து, நாடுதழுவிய அளவில் போராட்டங்களை நடத்துமாறு கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தது இம்ரான் கானின் தெக்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி. இதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து, தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்துவதாக பிடிஐ கட்சி அறிவித்தது. இதில் பங்கேற்பதற்காக இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா பகுதிக்கு நேற்று சென்றார்.

அப்போது அல்லாவாலா சவுக் எனும் இடத்தில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்ற நினைத்த இம்ரான் கான் அங்கிருந்த கண்டெய்னர் மீது ஏறி நின்றார். அப்போது கூட்டத்தில் இருந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில் இம்ரான் கானின் வலதுகாலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சரிந்து விழ, உடனடியாக லாகூரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்த கொடும் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,"இம்ரான் கான் மீதான இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அல்லாஹ் கப்தானை பாதுகாப்பாக வைத்திருக்கட்டும், எங்கள் அன்புக்குரிய பாகிஸ்தானை பாதுகாக்கட்டும். ஆமென்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த இம்ரான் கான், 1992 உலகக்கோப்பையை பாகிஸ்தான் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வாசிம் அக்ரம், முஷ்டாக் அஹமது, உமர் குல், வஹாப் ரியாஸ் ஆகியோர் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்திருப்பதுடன் அவர் விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

PAKISTAN, IMRAN KHAN, IMRAN KHAN ASSASSINATION, BABAR AZAM CONDEMNS, இம்ரான் கான், பாபர் அசாம் கடும் கண்டனம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்