'இந்தியா- சீனாவுக்கு' சண்டை வந்தால்... 'எந்த நாடு வெற்றிபெறும்...' சர்வதேச 'பெல்பர் மையம்' கணிப்பு...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு கென்னடி பள்ளியின் அறிவியல் மற்றும் சர்வதேச பெல்பர் மையம் இந்தியா-சீனாவின் படை பலத்தை ஆய்வு செய்து உள்ளது.

அதில் இரு நாடுகளிலும் உள்ள படை வீரர்களின் எண்ணிக்கை, விமானங்கள் மூலம் தாக்கும் திறன் போன்றவை விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளது. அதில் இறுதியாக போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

சீன படை பலத்தின் முன் இந்தியா சாதாரணமானது என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டு உள்ளது. இது முற்றிலும் தவறு. போரில் வெற்றி என்பது வீரர்கள், ஆயுதங்களின் எண்ணிக்கையில் மட்டும் கிடைத்து விடுவதில்லை. மாறாக களத்தில் செயல்படும் திறனின் அடிப்படையில் அமைந்து உள்ளது. அதன்படி சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் திறன் மிக சிறப்பாக உள்ளது.

தரைப்படை வீரர்களின் மொத்த எண்ணிக்கையை பொறுத்தவரை இரு நாடுகளும் சம எண்ணிக்கையில் தான் உள்ளன. ஆனால் இந்திய-சீன எல்லையில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கையில் இந்தியா தான் முன்னணியில் இருக்கிறது.

இந்திய எல்லை அருகே நிலைகொண்டு இருக்கும் சீன படையான மேற்கு திடேட்டர் கமாண்டட் படைப்பிரிவில் இருக்கும் சீன வீரர்களின் எண்ணிக்கை வெறும் 2 லட்சத்து 30 ஆயிரம் தான். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் மொத்தம் 20 லட்சம் இந்திய வீரர்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் மலை பகுதிகளில் போரிடும் திறன் பெற்றவர்கள். எனவே தரைப்படையில் இந்தியாவே பலம் பொருந்தி உள்ளது.

சீனாவின் மேற்கு திடேட்டர் கமாண்ட் பகுதியில் மொத்தம் 157 போர் விமானங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் இந்த பகுதியில் மட்டும் 270 போர் விமானங்கள் மற்றும் நிலப்பரப்பை அழிக்கும் 68 சிறிய ரக விமானங்களும் உள்ளன. அதன்படி விமானப்படையின் எண்ணிக்கையில் இந்த பகுதியில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. சீனாவின் ஜே-10 போர் விமானத்திற்கு இணையாக இந்தியாவில் மிராஜ் விமானங்கள் உள்ளன.

இந்தியாவின் அக்னி 3 ஏவுகணை மூலம் சீனாவின் அனைத்து முக்கிய பகுதிகளையும் இந்தியாவால் தாக்க முடியும். அதேபோல் அக்னி-2 ஏவுகணைகள் மூலம் இந்தியா மத்திய சீன பகுதி முழுவதையும் தாக்கும் திறன் கொண்டது. மிக முக்கியமாக 51 அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட ஜாக்குவார் விமானங்கள் மூலம் ஒட்டுமொத்த சீனாவின் திபெத் பகுதியை இந்தியா எளிதாக அழித்து விடும்.

இந்தியாவுடன் மோதல் ஏற்பட்டால் சீனா தனது நீளமான எல்லையில் உள்ள அனைத்து படைகளையும் ஒன்று திரட்ட வேண்டும். ஆனால் இந்தியாவிற்கு அப்படியல்ல, எளிதாக தனது படைகளை சீன எல்லையில் சேர்த்து விடும்.

ஏனென்றால் இந்தியாவின் படைகளில் அதிக சதவீதம் ஏற்கனவே சீன மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் தான் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய பலம். இந்தியா சீனாவை விட வலுவான நிலையில் உள்ளது. இவ்வாறு அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்