‘இப்போதான் எல்லாரும் அதைப்பத்தி பேசுறீங்க’!.. ‘ஆனா நான் அப்பவே சொன்னேன், வைரஸ் எங்கிருந்து பரவுச்சுன்னு’.. மீண்டும் பரபரப்பை கிளப்பும் டிரம்ப்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் குறித்து தான் முன்பு சொன்னதைதான் இப்போது அனைவரும் கூறுவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய ஆரம்ப கட்டத்தில், அமெரிக்காவில்தான் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அங்கு கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டது.

இதனால் அப்போது அமெரிக்கா அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், சீனா மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார். குறிப்பாக கொரோனா வைரஸை ‘சீன வைரஸ்’ என்றே அழைத்து வந்தார். ஆனால் டிரம்பின் இந்த குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

அமெரிக்க ஊடகங்கள் சமீப காலமாக வுகானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியதற்கான ஆதாரங்கள் வலுவடைந்து இருப்பதாக கூறி வருகின்றன. ஆனால், அந்த செய்திகளில் இடம்பெற்ற தகவல்களை கண்டித்துள்ள சீனா, கொரோனா வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என்று கூறியுள்ளது. இதனிடையே கொரோனா வைரஸின் மூலத்தை 90 நாட்களில் கண்டுபிடிக்க வேண்டும் என உளவுத்துறைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ‘சீன வைரஸ் வுகான் ஆய்வகத்தில் இருந்தே பரவியது என்று நான் கூறியதை சரிதான் என இப்போது அனைவரும் கூறுகின்றனர். குறிப்பாக என் எதிரி என்று சொல்லப்படுபவர்களும் கூட இதை சொல்லத் தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் உலகுக்கு ஏற்படுத்திய பேரழிவுக்காக அமெரிக்கா மற்றும் பிற உலக நாடுகளுக்கு சீனா 10 டிரில்லியன் டாலர் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்’ என அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்