முன்னாள் போப் பெனடிக்ட் காலமானார்.. வாடிகன் அறிவிப்பு.. உலக தலைவர்கள் இரங்கல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

முன்னாள் போப்பாண்டவர் பெனடிக்ட் காலமானதாக வாடிகன் திருச்சபை அறிவித்திருக்கிறது. அவருடைய வயது 95 ஆகும். இதனையடுத்து உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Advertising
>
Advertising

உலகம் எங்கிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை மத குருவாக கருதப்படுபவர் போப்பாண்டவர். பெனடிக்ட் கடந்த 2005 முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் போப் -ஆக இருந்தவர். ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள மார்க்டி என்ற கிராமத்தில் 1927ம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி பிறந்தவர் பெனடிக்ட். இவரது இயற்பெயர் ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், அந்த மதத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றை வகித்தவர். ஆர்ச் பிஷப், கார்டினல் ப்ரீஸ்ட், கார்டினல் பிஷப், கார்டினல் என பல்வேறு பதவிகளை வகித்தவர் ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர்.

போப்பாக இருந்த இரண்டாம் ஜான் பால் காலமானதை தொடர்ந்து கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி ஜோசப் அலாய்சியஸ் ரட்சிங்கர் போப் ஆக பொறுப்பேற்றார். அதன் பிறகு மக்கள் அவரை பெனடிக்ட் என்று அழைத்தனர். மிக அதிக வயதில் போப் -ஆக பதவியேற்றவர் என பெனடிக்ட் குறிப்பிடப்பட்டுகிறார். 8 ஆண்டுகள் போப்பாக இருந்த பெனடிக்ட் கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக தனது பதவியை துறந்தார்.

போப் பதவியில் இருந்து விலகிய பெனடிக்ட் அதன் பிறகு வாடிகன் நகரிலேயே தங்கி இருந்தார். பெனடிக்ட் தனது இறுதி ஆண்டுகளை வாடிகனில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் கழித்தார். அங்கு வசித்து வந்த அவர் இன்று காலை 09:34 மணிக்கு காலமானதாக வாடிகன் திருச்சபை அறிவித்திருக்கிறது.

வரும் ஜனவரி 5 ஆம் தேதி தற்போதைய போப் பிரான்சிஸ், பெனடிக்ட்-ற்கு இறுதி சடங்குகளை நடந்த இருக்கிறார். அவருடைய உடல் ஜனவரி 2 ஆம் தேதி முதல் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என வாடிகன் திருச்சபை தெரிவித்திருக்கிறது.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த முன்னாள் போப் பெனடிக்ட் குணமடைய பிரார்த்திக்குமாறு போப் பிரான்சிஸ் மக்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் பெனடிக்ட் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

POPE BENEDICT, VATICAN

மற்ற செய்திகள்