‘இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது’.. பாகிஸ்தான் வரலாற்றில் இதுதான் முதல்முறை.. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் விழுந்த வாக்குகள் எத்தனை..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தோல்வியடைந்து பதவியை இழந்துள்ளார்.

Advertising
>
Advertising

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கடந்த மார்ச் 28-ம் தேதி அந்நாட்டின் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதனைத் தொடர்ந்து இம்ரான் கானின் பரிந்துரையின் பேரில் அந்நாட்டு அதிபர், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டார். இதனால் பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உருவானது.

இதன் காரணமாக இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. வழக்கின் முடிவில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு தொடங்கியது. தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் ராஜினாமா செய்ததாக சொல்லப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை தவிர்க்கவே, அவர்கள் ராஜினாமா செய்வதாக தகவல் வெளியானது.

இதனை அடுத்து உடனடியாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு விசாரணை தொடங்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். நள்ளிரவு எந்த நேரம் ஆனாலும் நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை செய்யத் தயார் என நீதிபதிகள் அறிவிக்க, கைதை தவிர்க்க நள்ளிரவு 12 மணிக்கு முன் வாக்குப்பதிவு நடத்த சபாநாயகர் அசாத் கைசர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஒத்திவைப்பு, விவாதம் என வாக்கெடுப்பு தள்ளிக்கொண்டே போனது. சபாநாயகர் அடிக்கடி பிரதமர் இம்ரான் கானை சந்தித்து ஆலோசனை நடத்திக்கொண்டே இருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பு நடத்தச் சொல்லி முழங்க ஆரம்பித்தனர். ஒருபக்கம் நாடாளுமன்ற காட்சிகள் இப்படி இருக்க, மறுபுறம் இஸ்லாமாபாத் விமான நிலையம் ராணுவ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.  மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் விமான நிலையம் வருவதென்றால் அரசின் தடையில்லாச் சான்று வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே, நீண்ட இழுபறிக்கு பிறகு நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தொடங்கியது. இதன் முடிவுகள் 1.30 மணிக்கு அறிவிக்கப்பட்டன. அதன்படி, 342 பேர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 174 உறுப்பினர்கள் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்குகளை பதிவு செய்தனர். இதன்மூலம் இம்ரான் கான் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் இம்ரான் கான் தான் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமர் யார்? என நாடாளுமன்றம் கூடும்போது முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

PAKISTAN, IMRANKHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்