"பெரிய பிசினஸ்மேன் கூட பண்ண முடியாத விஷயம் இது.." இந்தியருக்கு வாரன் பஃபெட் எழுதிய லெட்டர்.. யாரு இந்த மோனிஷ் பாப்ரி?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகப் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய தொழிலதிபர் ஒருவருக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
வாரன் பஃபெட்
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர் மற்றும் தொழிலதிபருமான வாரன் பஃபெட், 'பெர்க்சயர் ஹாத்வே' என்னும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். பங்குச் சந்தை முதலீட்டின் பல்வேறு நுணுக்கமான தகவல்களை கண்டறிந்து அவற்றின் மூலம் உலக பணக்காரர் என்ற அளவிற்கு உயர்ந்தவர் தான் இந்த வாரன் பஃபெட். கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் வாரன் பஃபெட் முதல் இடம் பிடித்திருந்தார். அவருடைய தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 127.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி பஃபெட் தற்போது உலக பணக்காரர்களின் வரிசையில் 8 வது இடத்தில் உள்ளார்.
மோனிஷ் பாஃப்ரி
அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த மோனிஷ், முதலீட்டுத் துறையில் இயங்கி வருகிறார். தந்தோ ஃபண்ட்ஸ், தக்ஷனா பவுண்டேஷன் மற்றும் பாஃப்ரி ஃபண்ட்ஸ் ஆகிய அமைப்புகளை இவர் நிர்வகித்து வருகிறார்.
இவருடைய தக்ஷனா பவுண்டேசன் மூலமாக இந்தியாவில் வறுமையில் உழலும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறார். ஏழை மக்களுக்கான கல்வி மற்றும் உயர்கல்வி நிலையங்களில் படிக்க வாய்ப்பிருந்தும் பொருளாதார வசதி காரணமாக தவிக்கும் மக்களுக்கு இவர் உதவி வருகிறார். இதற்காக ஒரு வருடத்திற்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்களை இவர் செலவிட்டு வருகிறார்.
பாராட்டு
இந்நிலையில் மோனிஷை பாராட்டி கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார் வாரன் பஃபெட். அந்தக் கடிதத்தில்,"நான் நீங்கள் செய்துவரும் காரியங்களைப் பார்த்து இம்ப்ரஸ் ஆகி விட்டேன். தக்ஷனா பவுண்டேஷன் மூலமாக நீங்கள் செய்து வரும் காரியங்கள் மிகப் பெரிய தொழில் அதிபர்கள், முதலீட்டு நிபுணர்கள், புகழ் பெற்ற அரசியல்வாதிகள் ஆகியோரால் கூட செய்ய முடியாதவை. என்னுடைய ஆண்டு அறிக்கையை தக்ஷனா பவுண்டேஷனின் ஆண்டு அறிக்கையுடன் ஒப்பிடாமல் இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்" என குறிப்பிட்டிருக்கிறார். இந்த கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த மோனிஷ் வாரன் பஃபெட்டிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்