‘அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்’!.. கொரோனா வார்டில் ‘கண்கலங்க’ முதியவர் கேட்ட கேள்வி.. நொறுங்கிப் போன மருத்துவர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா பாதிக்கப்பட்ட முதியவரின் கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாமல் கட்டியணைத்து கலங்கி நின்ற மருத்துவரின் புகைப்படம் மனதை கலங்க வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கி ஒரு வருடத்தை கடந்துவிட்டது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதனால் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வார்டில் இருந்த முதியவர் ஒருவர் மருத்துவரை கண்கலங்க கட்டியணைத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் வாஷிங்கடனைச் சேர்ந்தவர் மருத்துவர் ஜோசப் வரோன். இவர் டெக்சாஸ் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். கிட்டத்தட்ட 252 நாட்களாக மருத்துவமனையில் சேவையாற்றி வரும் ஜோசப் வரோன், எத்தனையோ நோயாளிகளை பார்த்துள்ளார். ஆனால் முதியவர் ஒருவரின் கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாமல் கலங்கி நின்ற சம்பவம் குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து CNN ஊடகத்தில் பேசிய மருத்துவர் ஜோசப் வரோன், ‘நான் மருத்துவமனை ஐசியூ வார்டுக்கு சென்றேன். அங்கே ஒரு முதியவர் படுக்கையில் இருந்து இறங்கி அறையைவிட்டு வெளியேற முயற்சித்தார். அப்போது அவர் அழுதுகொண்டே இருந்தார். உடனே அவர் அருகில் சென்று ஏன் அழுகிறீர்கள்? என கேட்டேன்.

அதற்கு அவர், நான் என் மனைவியிடம் செல்லவேண்டும். அவள் கையை பற்றிக்கொள்ள வேண்டும் என கூறி கண்கலங்கினார். அதைக் கேட்டதும் எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. உடனே அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினேன். அப்போது அருகில் இருந்த செவிலியர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். சிறிது நேரத்தில் அவர் தனது அழுகையை நிறுத்தினார்.

நீங்கள் யோசித்துப்பாருங்கள். ஒரு அறைக்குள்ளேயே இருக்கிறீர்கள். உங்களை தேடி வரும் மனிதர்கள் கவச உடை அணிந்து  வருபவர்கள் மட்டுமே. உங்களுக்கு எப்படி இருக்கும்? அதுவும் வயதானவர்களுக்கு இன்னமும் மனதை வருந்த செய்யும். அவர்களுக்கு தனிமையை உணரச் செய்யும். அதனால்தான் பலரும் தப்பித்து ஓடுகின்றனர். ஜன்னல் வழியாக குதித்து தப்புகின்றனர்.

நிலைமை இப்படி இருக்கையில் மக்கள் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை மறந்து வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கின்றனர். மக்கள் அவ்வாறு இருக்கக்கூடாது. மக்கள் தாங்களாகவே சுயக்கட்டுப்பாடுடன் இருந்தால்தான் என்னைப்போன்ற மருத்துவர்களும், செவிலியர்களும் ஓய்வு எடுக்க முடியும்’ என கண்கலங்க தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்