'சின்னமையைப் போல அதிவேகமாக பரவும் 'டெல்டா வகை' கொரோனா'!.. லீக்கான அமெரிக்காவின் சீக்ரெட் ரிப்போர்ட்!.. நடுங்கவைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சின்னம்மை நோயைப் போல் டெல்டா வகை வைரஸ் எளிதில் வேகமாக பரவக் கூடியது, மற்ற பிற கொரோனா வைரஸ் மாறுபாடுகளைக் காட்டிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் அலை அலையாகத் தாக்குவதால் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் அனைத்து நாடுகளும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவில் மோசமான கொரோனா 2ம் அலை ஏற்படக் காரணமாக இருந்த டெல்டா கொரோனா, இப்போது மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. டெல்டா கொரோனாவால் பல்வேறு நாடுகளிலும் அடுத்த ஒரு கொரோனா அலை ஏற்படும் ஆபத்து உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் தொற்றுநோய் ஆய்வு மையம் டெல்டா கொரோனா பற்றிய அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், அந்நாட்டு ஊடகங்களில் லீக் ஆகியுள்ளது. அதில் 'டெல்டா' வகை கொரோனா குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. 

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் அந்த அறிக்கையில் கொரோனா வேக்சின் 2 டோஸை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் கூட வேக்சின் போடாத மக்களுக்கு இணையாக டெல்டா கொரோனாவை பரப்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'தி வாஷிங்டன் போஸ்ட்' முதலில் வெளியிட்ட இந்த அறிக்கையில், டெல்டா கொரோனா மற்ற கொரோனா வகைகளை விட மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை டெல்டா கொரோனா பற்றி அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குநர் ரோசெல் பி வாலென்ஸ்கி கூறுகையில், "தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மத்தியிலும் டெல்டா கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. தடுப்பூசி போடாதவர்களின் மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் எவ்வளவு வைரஸ் இருக்குமோ, வேக்சின் போட்டவர்கள் மத்தியிலும் அதே அளவு வைரஸ் உள்ளது. இதன் மூலம் எளிதாக அது மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இப்போது ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கை, டெல்டா கொரோனா அவர் கூறியதைவிட மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிடுகிறது. மெர்ஸ், சார்ஸ், எபோலா, சளி, காய்ச்சல் மற்றும் பெரியம்மை போன்ற வைரஸ்களை விட டெல்டா கொரோனா வேகமாகப் பரவுகிறது. சின்னம்மை நோய்க்கு ஈடாக டெல்டா கொரோனாவும் வேகமாகப் பரவுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், டெல்டா கொரோனா தீவிரமான பாதிப்புகளை அதிகமாக ஏற்படுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா கொரோனாவால் நாம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாறியுள்ளதாகவும், தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் டெல்டா கொரோனா மிக மோசமான அழிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

டெல்டா கொரோனா பற்றிய கூடுதல் தரவுகளை உள்ளடக்கிய அறிக்கை, வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது. டெல்டா கொரோனா குறித்து தற்போது வரை சேகரிக்கப்படும் தரவுகள் ஆபத்தான வகையில் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வேக்சின் போட்டுக்கொண்டவர்கள் மத்தியிலும் டெல்டா கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாகத் தெரிவித்த அவர், அதேநேரம் வேக்சின் போட்டவர்கள் மத்தியில் ஏற்படும் பாதிப்பு தீவிர பாதிப்பாக இல்லை என்றும் லேசான பாதிப்பாகவே உள்ளதாகவும் தெரிவித்தார். 

டெல்டா கொரோனா வைரஸ் குறிப்பாகக் காற்றில் தான் வேகமாகப் பரவுகிறது. ஆல்ஃபா கொரோனா வகையைக் காட்டிலும் டெல்டா கொரோனா வகை காற்றில் 10 மடங்கு வேகமாகப் பரவுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, டெல்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நாசி பகுதியில் 1000 மடங்கு கொரோனா வைரஸ் அதிகமாக உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த புதிய பரிந்துரைகளை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்