'தகவல்களைப் பகிர்ந்தால் தான் வழி கிடைக்கும்...' 'கொரோனாவின் ஆரம்பப் புள்ளியை கண்டறிய வேண்டும்...' 'சீனாவிற்கு எதிராகத் திரளும் பாதிக்கப்பட்ட நாடுகள்...!'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் உலகப் பொருளாதாரம் கடும் சரிவு போன்ற காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகள், சீனாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு வருகின்றன.

கொரோனாவின் பிடியில் இருந்து சீனா மீண்டுவந்த நிலையில், உலகத் தலைவர்களின் கோபப் பார்வை சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது. கொரோனா வைரஸ் தோன்றியது எப்படி என்பது உள்பட அனைத்து தகவல்களையும் சீனா பகிர்ந்தால் மட்டுமே உலக நாடுகள் இதிலிருந்து மீண்டுவரும் வழியைக் கண்டுபிடிக்க முடியும் என ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கூறியுள்ளார். மேலும், சீனாவிடமிருந்து 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பீடு கோரவும் ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.

இதே போல், கொரோனா வைரஸின் ஆரம்பப்புள்ளியை கண்டுபிடிக்க வேண்டுமென ஆஸ்திரேலியா கூறியது. வைரஸ் தோன்றியதை கண்டுபிடித்தால் மட்டுமே பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என அந்நாடு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா பரவத் தொடங்கிய இடத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என நம்புவதாகவும், விரைவான நடவடிக்கை எடுத்திருந்தால் உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்காது எனவும் தெரிவித்தார். சீனாவிடமிருந்து ஜெர்மனியை விட அதிக தொகையை தாங்கள் இழப்பீடு கோர உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்தியாவும் சீன மருத்துவ உபகரணங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட்களின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய இந்தியா அவற்றை சீனாவுக்கே திரும்ப அனுப்ப முடிவு செய்துள்ளது. சீனாவுடன் வர்த்தகம் செய்ய பல நாடுகளும் தயங்கி வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.

உலக பொருளாதாரம் பாதிக்கப்பட காரணமாக இருந்த சீனா மீது பல நாடுகள் ஓரணியில் இணைந்து விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்