‘கொரோனா’ பாதிப்பில்... ‘2வது’ இடத்திலிருந்து ‘9வது’ இடம்... உதவிய ‘மெர்ஸ்’ பாதிப்பு அனுபவம்... ‘தென்கொரியா’ கட்டுப்படுத்தியது ‘எப்படி?’...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்த தென்கொரியா அதன் தீவிர நடவடிக்கைகளால் தற்போது வைரஸ் பரவலை பெருமளவு குறைத்திருக்கிறது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து நாட்டு எல்லைகளும் மூடப்பட்டு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால்  இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகள் செய்வதறியாது திணறி வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் முதலில் அதிகமாக பாதிக்கப்பட்ட சீனா, தென்கொரியா நாடுகள் தற்போது வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளன. பிப்ரவரி தொடக்கத்தில் கொரோனா அதிகமாக பாதித்த நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த தென்கொரியா தற்போது 9வது இடத்துக்குச் சென்றுள்ளது. இதற்கு அங்கு எடுக்கப்பட்ட துரித மற்றும் தீவிர நடவடிக்கைகளே காரணம் எனக் கூறப்படுகிறது.

தென்கொரியாவில் தற்போது 9,137 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உள்ளது. இந்நிலையில் உலகிலேயே அங்குதான் அதிகமான அளவு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு ஒரு நாளுக்கு 20,000 மக்களுக்குக் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. அத்துடன் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் தொடர்ச்சியாக சோதனை நடத்தப்பட்டு வருவதுடன், ஆயிரக்கணக்கான தற்காலிக முகாம்கள் அமைத்தும் வைரஸ் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

2015ஆம் ஆண்டு பரவிய MERS (Middle East Respiratory Syndrom) என்ற சுவாசத் தொற்றுநோயால் சவுதி அரேபியாவுக்கு அடுத்து அதிக மக்கள் உயிரிழந்த நாடு தென்கொரியா ஆகும். அப்போது அங்கு உருவாக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு மையங்களே தற்போது பெரிதும் உதவுவதாக கூறப்படுகிறது. சமூக இடைவெளியை கட்டாயமாக்கியது, அதிகளவில் கொரோனா சோதனை, வைரஸ் பாதிப்புள்ளவர்களை ஆரம்பகட்டத்திலேயே தனிமைப்படுத்துதல் ஆகியவையே அங்கு கொரோனா பரவலை பெருமளவில் குறைத்துள்ளது. மேலும் கொரோனாவால் 60 வயதுக்கும் மேல் உள்ளவர்களுக்கே ஆபத்து அதிகமாக உள்ள நிலையில், அங்கு வெறும் 18% மட்டுமே முதியவர்கள் உள்ளதும் உயிரிழப்புகள் குறைய முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. பெரும் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவைக் கட்டுப்படுத்த தற்போது தென்கொரியாவிடம் உதவி கேட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

CORONAVIRUS, SOUTHKOREA, LOCKDOWN, STRATEGY, TEST, TREATMENT, US

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்